பாலியல் பலாத்கார முயற்சியில் பக்கத்து வீட்டு பெண்ணின் கன்னத்தை கடித்து குதறிய மின்வாரிய ஊழியர்; சென்னையில் பரபரப்பு சம்பவம்
சென்னையில் பாலியல் பலாத்கார முயற்சியில் பக்கத்து வீட்டு பெண்ணின் கன்னத்தை கடித்து குதறிய மின்வாரிய ஊழியர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மின்வாரிய ஊழியர் மீது புகார்
சென்னை அமைந்தகரை, முத்து இருளாண்டி காலனியைச் சேர்ந்த மின்சார வாரிய ஊழியர் மீது பக்கத்து வீட்டில் வசிக்கும் பெண் ஒருவர் சூளைமேடு போலீசில் பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார்.
அந்த புகார் மனு விவரம் வருமாறு:-
குறிப்பிட்ட அந்த மின்வாரிய ஊழியருக்கு 50 வயதாகிறது. அவருக்கு மனைவி மற்றும் குடும்பத்தினர் உள்ளனர். போதைக்கு அடிமையான அவர், என் மீது ஆசை கொண்டார். கணவரை இழந்து வாழும் என்னை, அவரது இச்சைக்கு அழைத்து தொல்லை கொடுத்து வந்தார். ஆனால் அவரது இச்சைக்கு இணங்க நான் மறுத்து விட்டேன்.
கன்னத்தில் கடித்தார்....
இதனால் பொங்கல் பண்டிகை தினத்தன்று இரவு 7 மணி அளவில், வீட்டில் தனிமையில் இருந்த என்னிடம் அவர் தவறாக நடக்க முயற்சித்தார். பாலியல் பலாத்காரம் செய்யும் நோக்கத்துடன் அவர் செயல்பட்டார்.
போதையில் இருந்த அவர், என்னை கட்டி அணைத்து தொல்லை கொடுத்தார். அவரை தள்ளிவிட்ட நான், வீட்டைவிட்டு வெளியில் ஓடி வந்தேன். ஆனால் பின்னால் விரட்டி வந்த அவர், எனது கன்னத்தில் கடித்து குதறி விட்டு, தப்பி ஓடி விட்டார். கன்னத்தில் கடித்ததால் காயம் அடைந்த நான், ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றேன். இது தொடர்பாக சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
போலீசார் விசாரணை
இந்த புகாரின் அடிப்படையில், உதவி கமிஷனர் முத்துவேல்பாண்டி மேற்பார்வையில், சூளைமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்த்பாபு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
பாலியல் பலாத்கார முயற்சியில் பெண்ணின் கன்னத்தை கடித்து குதறிய மின்சார வாரிய ஊழியர் கைது செய்யப்படுவார் என்று தெரிகிறது.
Related Tags :
Next Story