அரசு பள்ளி கட்டிட பணிகளை விரைந்து முடிக்க கோரி காஞ்சீபுர கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்


அரசு மேல்நிலைப் பள்ளி கட்டிட பணிகளை விரைந்து முடிக்க கோரி கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட போது
x
அரசு மேல்நிலைப் பள்ளி கட்டிட பணிகளை விரைந்து முடிக்க கோரி கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட போது
தினத்தந்தி 18 Jan 2021 8:30 PM GMT (Updated: 18 Jan 2021 7:57 PM GMT)

காஞ்சீபுரம் அருகே அரசு பள்ளியில் வகுப்பறை கட்டிட பணிகள் நிறுத்தப்பட்ட நிலையில், விரைந்து முடிக்க கோரி 100-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

கட்டுமான பணி நிறுத்தம்
காஞ்சீபுரம் அடுத்த கோவிந்தவாடி கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. இந்த நிலையில், தரம் உயர்த்தப்பட்ட பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் கட்ட நிதி அரசு சார்பில் ஒதுக்கீடு செய்யப்பட்டது. கட்டிடம் கட்டும் பணி நடைபெற்று வந்த நிலையில் திடீரென கட்டுமான பணி நிறுத்தப்பட்டது.

இது குறித்து தங்கள் குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படும் என கூறி பலமுறை கல்வி துறை அதிகாரிகளுக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

கலெக்டர் அலுவலகம் முற்றுகை
அதைதொடர்ந்து, கட்டுமான பணிகளை விரைந்து முடித்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்து காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை 100-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் நேற்று முற்றுகையிட்டனர்.

கிராம மக்கள் முற்றுகையிட்டதையடுத்து, ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு கிராம மக்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். அதைத்தொடர்ந்து கிராம மக்கள் காஞ்சீபுரம் வருவாய் ஆர்.டி.ஓ. வித்யாவிடம் பள்ளி கட்டிடத்தை விரைந்து கட்டி முடித்து தரவேண்டும் என கோரிக்கை மனுவை அளித்தனர்.

Next Story