மழையால் சேதம் அடைந்த பயிர்களுக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும்; குறைதீர்க்கும் கூட்டத்தில் தென்காசி மாவட்ட கலெக்டரிடம் மனு


தென்காசி கலெக்டர் அலுவலகத்தில் ரேஷன் கடை கட்டித்தரக் கோரி மனு கொடுக்க வந்தவர்களை படத்தில் காணலாம்.
x
தென்காசி கலெக்டர் அலுவலகத்தில் ரேஷன் கடை கட்டித்தரக் கோரி மனு கொடுக்க வந்தவர்களை படத்தில் காணலாம்.
தினத்தந்தி 18 Jan 2021 9:49 PM GMT (Updated: 18 Jan 2021 9:49 PM GMT)

தென்காசி மாவட்டத்தில் மழையால் ேசதமடைந்த பயிர்களுக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டு உள்ளது.

மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்
தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று கலெக்டர் சமீரன் தலைமையில் காணொலி மூலமாக மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது.

சாம்பவர் வடகரை பால்பண்ணை தெருவைச் சேர்ந்த எம்.கே.டி.கண்ணன் என்பவர் கொடுத்த மனுவில், பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள் படித்து வரும் சாம்பவர்வடகரை அரசு மேல்நிலைப்பள்ளியில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி கொடுக்க பலமுறை மனுக்கள் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் தனியார் பள்ளிகளில் சேரும் நிலை உள்ளது. எனவே உடனடியாக அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

பழுதடைந்த ரேஷன் கடை
கடையநல்லூர் தாலுகா வேலப்பநாடாரூர் இந்து நாடார் உறவின் முறை மகமை கமிட்டி சார்பில் கொடுத்துள்ள மனுவில்,‘எங்களது ஊரில் 1000 குடும்பங்கள் வசித்து வருகிறது. சுமார் 700 குடும்ப அட்டைகள் இங்கு உள்ளது. இதற்காக இயங்கிவரும் ரேஷன்கடை ஆபத்தான நிலையில் இடியும் தருவாயில் உள்ளது. இதன் அருகில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இதில் 50 குழந்தைகள் படித்து வருகிறார்கள். எனவே குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி 2 ஆண்டுகளுக்கு முன்னர் மாற்று ஏற்பாடாக ஊர் பொது கட்டிடத்தில் ரேஷன்கடை செயல்பட்டு வருகிறது. இந்த கட்டிடமும் கூட்டுறவு நிர்வாகத்தின் சரியான பராமரிப்பு இல்லாமல் ஆபத்தான நிலையில் உள்ளது. எனவே புதிதாக ரேஷன் கடை கட்டித்தர வேண்டும். இந்த மாதத்திற்கான ரேஷன் பொருட்கள் எங்களுக்கு கிடைக்க வேண்டும். இது கிடைக்காத பட்சத்தில் ரேஷன் அட்டைகள் அனைத்தையும் ஒப்படைக்க தயாராக இருக்கிறோம்’ என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பயிர்களுக்கு நஷ்டஈடு
தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் சிவபத்மநாதன் கொடுத்துள்ள மனுவில், ‘தென்காசி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் சுமார் ஒரு லட்சம் ஏக்கருக்கு அதிகமான மானாவரி நிலங்களில் உளுந்து, பாசிப்பயிறு மற்றும் மக்காச்சோளம் போன்றவற்றை விவசாயிகள் விதைத்திருந்தனர். காலம் தாழ்த்தி ஒரு வார காலமாக மழை பெய்து வந்ததால் பயிர்கள் சேதம் அடைந்துள்ளன. இந்த பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.

பாம்புக்கோவில் சந்தை த.மு.மு.க. (ஹைதர் அலி அணி) மருத்துவ சேவை அணி சார்பில் நகரச் செயலாளர் காஜா மைதீன் கொடுத்துள்ள மனுவில், ‘மடத்துப்பட்டி கிராமத்தில் ஆட்டுச்சந்தை, ரேஷன் கடை மற்றும் அங்கன்வாடி அருகில் மிகவும் பழமையான ஊருணி உள்ளது. இதனைச் சுற்றி சுமார் 200 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த ஊருணியை சுற்றி குப்பைகள் நிறைந்து காணப்படுகின்றன. தற்போது மழைக்காலம் என்பதால் கொசு மற்றும் நோய் கிருமிகள் மூலம் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. இதனை சீரமைத்து தர வேண்டும் என்று தெரிவித்து இருந்தனர்.

Next Story