12 கிராம பஞ்சாயத்துகளுக்கு குடிநீர் வழங்கும் புதியம்புத்தூர் மலர்குளம் 6 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பியது; பொதுமக்கள்-விவசாயிகள் மகிழ்ச்சி


புதியும்புத்தூர் மலர்குளம் நிரம்பி வழிவதை படத்தில் காணலாம்.
x
புதியும்புத்தூர் மலர்குளம் நிரம்பி வழிவதை படத்தில் காணலாம்.
தினத்தந்தி 19 Jan 2021 3:28 AM IST (Updated: 19 Jan 2021 3:28 AM IST)
t-max-icont-min-icon

ஓட்டப்பிடாரம் அருகே 12 கிராம பஞ்சாயத்துகளுக்கு குடிநீர் வழங்கும் புதியம்புத்தூர் மலர்குளம் 6 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பி வழிகிறது. இதனால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மலர்குளம்
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள மலர்குளம் 12 கிராம பஞ்சாயத்துகளுக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கி வருகிறது. இதற்கு முன்னர் 1992-ம் ஆண்டு மழை வெள்ளத்திலும், 2015-ம் ஆண்டு மழை வெள்ளத்திலும் மலர்குளம் நிரம்பியது. அதன் பின்னர் பல ஆண்டுகள் கழித்து இப்போது 2021 வெள்ளத்தில் குளம் நிரம்பியுள்ளது.

இப்பகுதியில் முன்பு நெல் விவசாயமும், பின்னர் மலர் சாகுபடியும் நடைபெற்று வந்தது. மலர்குளம் ஆயக்கட்டுப் பகுதியில் இப்போது கிணற்றுப் பாசனத்தை மட்டுமே நம்பி தோட்டப்பயிர்கள் பயிரிடப்பட்டு வருகின்றன. மலர்குளம் கண்மாய் நீர்வரத்துக் கால்வாய்களும், குளமும் மராமத்து செய்யப்படாமல் இருந்ததால் உப்போடை நீர்வரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது.

நிலத்தடி நீர் வியாபாரம் நடக்கும் போது கிணறுகளில் நீர் வற்றி, நிலத்தடி நீர் உப்புத்தன்மையாக மாறியதோடு கடும் குடிநீர் பஞ்சமும் ஏற்பட்டது. நீர்வரத்துக் கால்வாய்களை சீரமைக்க அப்பகுதி மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை வைத்து வந்தனர்.

எப்போது தேர்தல் வந்தாலும் மலர்குளத்திற்கு தண்ணீர் கொண்டு வருவது எல்லாக் கட்சியின் முக்கியமான தேர்தல் வாக்குறுதியாக இருக்கும்.

நிரம்பியது
ஆனால், சுண்ணாம்பு கற்கள் கலந்த மலர்குளம் கண்மாய் மண்ணை விவசாய நிலத்திலும் பயன்படுத்த முடியாது. வெளியிலும் விற்க முடியாது என்பதால் குடிமராமத்து திட்டத்தில் கூட கண்மாய் தூர்வாரப்படவில்லை.

இந்நிலையில் ஓட்டப்பிடாரம் பஞ்சாயத்து கூட்டமைப்பு தலைவர்கள் சார்பில் ஓட்டப்பிடாரம் பஞ்சாயத்து தலைவர் இளையராஜா சொந்த செலவில் ரூ.3 லட்சம் செலவில் மலர் குளத்திற்கு வரும் வரத்து கால்வாய் தூர்வாரப்பட்டது. கடந்த 5 நாட்களாக பெய்த கனமழையால் குளமும் நிரம்பியது.

இந்த குளத்தை சுற்றிலும் 12 பஞ்சாயத்துகளுக்கு 30-க்கும் மேற்பட்ட ஆழ்குழாய் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. கடந்த 6 ஆண்டுகளுக்கு பிறகு புதியம்புத்தூர் மலர்குளம் நிரம்பியது.

பொதுமக்கள் மகிழ்ச்சி
இதன் குளத்தை நம்பியிருந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மலர்குளம் நிரம்பி வழிவதை விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் ஆர்வத்துடன் கூட்டம் கூட்டமாக பார்த்து செல்கின்றனர். குளம் வரத்துக் கால்வாய்களை முறையாக தூர்வாரி குளத்துக்கு தண்ணீர் தேக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

Next Story