உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள் இன்று திறப்பு: தயார் நிலையில் வகுப்பறைகள்-கிருமிநாசினி தெளிப்பு அதிகாரிகள் ஆய்வு


உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள் இன்று திறப்பு: தயார் நிலையில் வகுப்பறைகள்-கிருமிநாசினி தெளிப்பு அதிகாரிகள் ஆய்வு
x
தினத்தந்தி 19 Jan 2021 6:10 AM IST (Updated: 19 Jan 2021 6:10 AM IST)
t-max-icont-min-icon

உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள் இன்று திறக்கப்பட உள்ளது. இதையொட்டி கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. இதனை அதிகாரிகள்ஆய்வு செய்தனர்.

புதுக்கோட்டை, 

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த ஆண்டு (2020) மார்ச் மாதம் 3-வது வாரத்தில் மூடப்பட்டன. தற்போது எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 வகுப்பு மாணவர்களுக்காக உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் திறக்கப்படுகிறது. புதுக்கோட்டை மாவட்டத்திலும் பள்ளிகளை திறக்க முன்னேற்பாடு பணிகளை அதிகாரிகள் மேற்கொண்டனர். பள்ளியில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பல்வேறு நடைமுறை அறிவித்துள்ளது.

அதன்படி வகுப்பறைகள் உள்பட பள்ளி வளாகத்தை சுத்தம் செய்து தயார்நிலையில் வைத்துள்ளனர். மேலும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. இந்த நிலையில் பள்ளிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகளை ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் நிர்மல்ராஜ், கலெக்டர் உமாமகேஸ்வரி ஆகியோர் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். பள்ளிக்கல்வி துறை இணை இயக்குனர் (நாட்டு நலப்பணிகள்) வாசு, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி விஜயலட்சுமி மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

அப்போது கலெக்டர் கூறுகையில், `மாணவர்கள் பள்ளிக்கு வருகை புரிய கடந்த ஆண்டு வழங்கப்பட்ட அரசின் இலவச பேருந்து பயண அட்டையினையே பயன்படுத்திக்கொள்ளலாம். மாணவர்கள் பள்ளிக்கு வருகை தரும்பொழுது முககவசம் அணிந்து வருகை தர வேண்டும். பள்ளியில் `தெர்மல் ஸ்கேனர்' மூலம் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டு, கைகளை தூய்மையாக வைத்துக்கொள்ள கிருமி நாசினி வழங்கப்பட்டு, சமூக இடைவெளியை பின்பற்றி ஒவ்வொரு வகுப்பறையிலும் 25 மாணவர்களுக்கு மட்டும் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளது. பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும்பொழுது உரிய அறிவுரைகள் வழங்கி முககவசத்துடன் பள்ளிக்கு மாணவர்களை அனுப்ப வேண்டும்' என்றார்.

யாகசாலை பூஜை

பள்ளி திறப்பையொட்டி திருவரங்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் சங்கம் மூலம் பள்ளிக் கட்டிடத்தின் முகப்பு பகுதியில் சிவாச்சாரியார்கள் மூலம் யாகசாலை பூஜை நடத்தப்பட்டது. பின்னர் வகுப்பறைகளில் புனித நீர் தெளிக்கப்பட்டு சாம்பிராணி, சூடம், தீபம் காண்பிக்கப்பட்டது. இதில் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தலைவர் ராஜாக்கண்ணு, பள்ளி தலைமை ஆசிரியர் முருகையன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். மாணவ-மாணவிகள் நல்ல ஆரோக்கியத்துடன் கல்வி பெற வேண்டி இந்த பூஜை நடைபெற்றது.

கீரமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் கோவிந்தராஜ் தலைமையிலான ஆசிரியர், ஆசிரியைகள் மற்றும் கீரமங்கலம் பேரூராட்சி ஊழியர்கள் இணைந்து பள்ளி வளாகம், வகுப்பறைகளை தூய்மைபடுத்தினர். இதே போல கீரமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் கொத்தமங்கலம், குளமங்கலம், மேற்பனைக்காடு உள்ளிட்ட பல கிராமங்களிலும் உள்ள அரசு பள்ளிகள் சுத்தம் செய்யப்பட்டு கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.

இலுப்பூர், பொன்னமராவதி

இதேபோல் இலுப்பூர் பகுதியில் உள்ள பள்ளிகளில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு வகுப்புகள் தூய்மைப்படுத்தப்பட்டன. மேலும் பள்ளிகளில் கடைப்பிடிக்கப்படவேண்டிய வழிமுறைகள் குறித்து ஆசிரியர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.

இதேபோல் பொன்னமராவதி அருகே மேலைச்சிவபுரி அரசு மேல்நிலைப் பள்ளியில் சுகாதார ஆய்வாளர் உத்தமன் தலைமையில் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யப்பட்டது.

Next Story