மாணவிகளுக்கு பாலியல் வன்கொடுமை: அரசு பள்ளி ஆசிரியருக்கு 49 ஆண்டுகள் சிறை தண்டனை
மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்த அரசு பள்ளி ஆசிரியருக்கு 49 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து புதுக்கோட்டை மகிளா கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை தாலுகா நரியன்புதுப்பட்டி ஊராட்சி ஒன்றிய அரசு தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தவர் அன்பரசன் (வயது 52). இதே பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றியவர் ஞானசேகரன் (50). கடந்த 2018-ம் ஆண்டு மார்ச் மாதம் 21-ந் தேதி இந்த பள்ளியில் படிக்கும் 5-ம் வகுப்பு மாணவி ஒருவரை ஆசிரியர் அன்பரசன் பாலியல் வன்கொடுமை செய்தார்.
இது தொடர்பாக மாணவியின் பெற்றோர், புதுக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் விசாரணையில் மாணவிகள் சிலரை ஆசிரியர் அன்பரசன் பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. மாணவிகள் தரப்பில் புகார் அளித்தும் தலைமை ஆசிரியர் நடவடிக்கை எடுக்காமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து ஆசிரியர் அன்பரசன், தலைமை ஆசிரியர் ஞானசேகரன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். 2 பேர் மீதும் துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டது.
49 ஆண்டுகள் சிறை தண்டனை
இந்த வழக்கு புதுக்கோட்டை மகிளா கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த நிலையில் வழக்கில் நேற்று நீதிபதி டாக்டர் சத்யா தீர்ப்பு அளித்தார். இதில் மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 3 மாணவிகள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் ஆசிரியர் அன்பரசனுக்கு போக்சோ சட்டத்தில் ஒரு பிரிவில் தலா 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ.5 ஆயிரம் அபராதமும், அபராத தொகை கட்டத்தவறினால் தலா 2 மாதம் சிறை தண்டனையும், வன்கொடுமையை வெளியில் சொல்லாமல் இருக்க மாணவிகளுக்கு மிரட்டல் விடுத்ததற்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்தும், இதனை ஏக காலத்தில் (7 ஆண்டுகள்) அனுபவிக்கவும் தீர்ப்பு கூறினார்.
மேலும் பாலியல் வன்கொடுமை தொடர்பாக 6 மாணவிகள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் போக்சோ சட்டத்தில் ஒரு பிரிவின் கீழ் தலா 7 ஆண்டுகளும், தலா ரூ.5 ஆயிரம் அபராதமும், அபராத தொகை கட்டத்தவறினால் தலா 2 மாதம் சிறை தண்டனையும், இதனை தொடர்ச்சியாக தனித்தனியாக அனுபவிக்க வேண்டும் எனவும் நீதிபதி தீர்ப்பளித்தார். அதன்படி ஆசிரியர் அன்பரசனுக்கு 7 ஆண்டுகள் மற்றும் 42 ஆண்டுகள் சேர்த்து மொத்தம் 49 ஆண்டுகள் சிறைதண்டனை அனுபவிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
தலைமை ஆசிரியருக்கு தண்டனை
இதேபோல மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்த ஆசிரியர் மீது புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காமல் உடந்தையாக இருந்ததற்கு தலைமை ஆசிரியர் ஞானசேகரனுக்கு ஓராண்டு சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும், அபராத தொகை கட்டத்தவறினால் 2 மாதம் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார். பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு ஏற்கனவே தலா ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டது. மேலும் ரூ.1½ லட்சம் இழப்பீடு வழங்க நீதிபதி உத்தரவிட்டார்.
இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் அங்கவி ஆஜராகி வாதாடினார். மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ஆசிரியருக்கு 49 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது புதுக்கோட்டையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story