10-ம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 மாணவர்களுக்காக மாவட்டத்தில் 600 பள்ளிகள் இன்று திறப்பு


10-ம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 மாணவர்களுக்காக மாவட்டத்தில் 600 பள்ளிகள் இன்று திறப்பு
x
தினத்தந்தி 19 Jan 2021 9:13 AM IST (Updated: 19 Jan 2021 9:13 AM IST)
t-max-icont-min-icon

10-ம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 மாணவ,மாணவிகளுக்காக மாவட்டத்தில் 600 பள்ளிகள் இன்று (செவ்வாய்க்கிழமை) திறக்கப்படுகின்றன. வகுப்பறைகள் சுத்தமாக உள்ளதா? என அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

சேலம், 

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவுதல் காரணமாக கடந்த 9 மாதங்களுக்கு மேலாக பள்ளிகள் மூடப்பட்டு இருக்கின்றன. தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு ஆன்லைன் மூலம் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 படிக்கும் மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெறுவதை கருத்தில் கொண்டு அவர்களுக்கு மட்டும் பள்ளிகளை திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகள் என 600 பள்ளிகளில் 10 மற்றும் பிளஸ்-2 வகுப்புகளில் 88 ஆயிரத்து 266 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். அரசு உத்தரவுப்படி பள்ளிகள் திறக்கப்படுவதால் பள்ளி வளாகங்கள், வகுப்பறைகள் மற்றும் சுகாதார வளாகங்களை தூய்மைப்படுத்தும் பணியில் நேற்று ஊழியர்கள் முழுவீச்சில் ஈடுபட்டனர்.

கல்வி அதிகாரிகள் ஆய்வு

இந்த நிலையில் பள்ளிகளை கண்காணித்து ஆய்வு செய்ய தாலுகா வாரியாக குழுக்களை அமைத்து கலெக்டர் ராமன் உத்தரவிட்டுள்ளார். இதுதவிர மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேசமூர்த்தி தலைமையிலும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுக்கள் நேற்று ஒவ்வொரு பள்ளிக்கூடங்களாக சென்று அரசு நெறிமுறைகள் பின்பற்றப்படுகிறதா? என ஆய்வு செய்து வருகின்றனர். இதுகுறித்து கல்வி அதிகாரிகள் கூறியதாவது:-

சேலம் மாவட்டத்தில் 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 படிக்கும் மாணவர்களுக்காக 291 அரசு பள்ளிகள் உள்பட 600 பள்ளிக்கூடங்கள் திறக்கப்படுகின்றன. ஒவ்வொரு வகுப்பறைக்கும் 25 மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். வகுப்புகள் தொடங்குவதற்கு முன்பாக மாணவர்கள் அனைவருக்கும் தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதனை செய்யப்படும். மேலும் மாணவர்கள் முககவசம் அணிவதுடன் சமூக இடைவெளியை பின்பற்றுவது குறித்து தலைமை ஆசிரியர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர வகுப்பறைகளை எப்போதும் சுத்தமாகவும், கிருமிநாசினி மூலம் தூய்மைப்படுத்தவும் உத்தரவிட்டுள்ளது.

அனுமதி கடிதம்

முக்கியமாக பள்ளிக்கூடம் வரும் மாணவர்கள் அனைவரும் தங்கள் வீட்டில் இருந்து பெற்றோரிடம் அனுமதி கடிதம் வாங்கி வர அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பள்ளிகளில் ஒரு விண்ணப்பம் கொடுப்போம். அதில் பெற்றோர் கையெழுத்திட்டு வாங்கி வர நடவடிக்கை எடுக்கப்படும். முதலில் மாணவர்களின் மனநிலையை ஆசிரியர்கள் ஒருங்கிணைப்படுத்தி அதன்பிறகு பாடங்கள் நடத்தப்படும். அரசு வழிகாட்டுதலின் படி மாணவ, மாணவிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பள்ளிகளில் அனைத்து ஏற்பாடுகளை தீவிரமாக செய்து வருகிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story