அழுகிய நெற்பயிர்களுடன் தாசில்தார் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் திருத்துறைப்பூண்டியில் நடந்தது


அழுகிய நெற்பயிர்களுடன் தாசில்தார் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் திருத்துறைப்பூண்டியில் நடந்தது
x
தினத்தந்தி 19 Jan 2021 9:42 AM IST (Updated: 19 Jan 2021 9:42 AM IST)
t-max-icont-min-icon

திருத்துறைப்பூண்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் அழுகிய நெற்பயிர்களுடன் தாசில்தார் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருத்துறைப்பூண்டி,

நிவர், புரெவி ஆகிய புயல்கள் மற்றும் அதைத்தொடர்ந்து பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். அனைத்து விவசாயிகளுக்கும் குளறுபடிகளின்றி 100 சதவீதம் காப்பீட்டு தொகை வழங்க வேண்டும். விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட விவசாய குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். கனமழையால் வீடுகளை இழந்தவர்களுக்கு புதிய கான்கிரீட் வீடுகள் கட்டித்தர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருத்துறைப்பூண்டி தாசில்தார் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் அழுகிய நெற்பயிர்களுடன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஊர்வலம்

முன்னதாக கட்சியினர் அழுகிய நெற்பயிர்களுடன் திருத்துறைப்பூண்டி- வேதை சாலையில் உள்ள அம்பேத்கார் சிலையில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு தாசில்தார் அலுவலகத்துக்கு வந்தனர்.

தொடர்ந்து நடந்த போராட்டத்துக்கு நகர செயலாளர் ரகுராமன், ஒன்றிய செயலாளர் காரல் மார்க்ஸ் ஆகியோர் தலைமை தாங்கினர். மாநிலக்குழு உறுப்பினர் நாகராஜன், மாவட்டக்குழு உறுப்பினர் சுப்பிரமணியன், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட பொருளாளர் சாமிநாதன் ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் திருத்துறைப்பூண்டி தாசில்தார் ஜெகதீசன், துணை போலீஸ் சூப்பிரண்டு பழனிசாமி, இன்ஸ்பெக்டர் மகாதேவன், சப்-இன்ஸ்பெக்டர்கள் சீவகன், தேவதாஸ் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

தாசில்தார் அலுவலகத்தில் பரபரப்பு

அப்போது கோரிக்கைகளுக்கு தீர்வு காண உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தாசில்தார் உறுதி அளித்தார். அதன்பேரில் போராட்டம் கைவிடப்பட்டது. இந்த போராட்டம் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நீடித்ததால் தாசில்தார் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story