தஞ்சை மாவட்டத்தில் இன்று பள்ளிகள் திறப்பு: பாதுகாப்பு அம்சங்கள் குறித்து அதிகாரிகள் ஆய்வு
தஞ்சை மாவட்டத்தில் இன்று(செவ்வாய்க்கிழமை) பள்ளிகள் திறக்கப்பட உள்ளதை தொடர்ந்து பாதுகாப்பு அம்சங்கள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
தஞ்சாவூர்,
கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக, தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் பள்ளிகள் மூடப்பட்டன. கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில் 10, 12-ம் வகுப்புகளுக்கு மட்டும் பள்ளிகளை திறக்கலாமா? என பெற்றோரிடம் கருத்து கேட்கப்பட்டு, அவர்களின் கருத்துக்களின் அடிப்படையில் இன்று(செவ்வாய்க்கிழமை) முதல் பள்ளிகள் திறக்க தமிழகஅரசு அனுமதி அளித்துள்ளது.
தஞ்சை மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகள் என மொத்தம் 438 உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளில் 10, 12-ம் வகுப்பு இன்று முதல் செயல்படுகிறது. இதில் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் 35 ஆயிரத்து 132 பேரும், 12-ம் வகுப்பு படிக்கும் 29 ஆயிரத்து 488 மாணவ, மாணவிகளும் படித்து வருகிறார்கள்.
பள்ளிகள் திறப்பையொட்டி கடந்த 2 நாட்களாக வகுப்பறைகளை தூய்மை செய்யும் பணி நடைபெற்றது. வளாகத்தில் இருந்த புல், செடிகள் அகற்றப்பட்டு, குடிநீர் தொட்டிகளும் சுத்தம் செய்யப்பட்டன.
அதிகாரிகள் ஆய்வு
இந்தநிலையில் பள்ளிகளில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் நிர்மல்ராஜ், பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குனர் வாசு ஆகியோர் தஞ்சை அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, வல்லம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் ஆவணம், திருவோணம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் உள்ள பள்ளிகளில் ஆய்வு செய்தனர்.
அப்போது, ஒரு வகுப்பறைக்கு 25 மாணவர்களுக்கு மிகையில்லாமல் செயல்பட அறிவுறுத்த வேண்டும். மாணவ, மாணவிகளுக்கு சுகாதாரத்துறையின் மூலம் வைட்டமின் மற்றும் ஜிங்க் மாத்திரைகள் வழங்கப்படுவது உறுதி செய்திட வேண்டும் என ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தினர்.
10 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால் மாணவர்கள் மகிழ்ச்சியாக பள்ளிக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆய்வின்போது மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் ராமகிருஷ்ணன் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story