கிராம பஞ்சாயத்து தேர்தல் தோல்வியை பா.ஜனதா ஒப்புக்கொள்ள வேண்டும்; சிவசேனா வலியுறுத்தல்
கிராம பஞ்சாயத்து தேர்தல் தோல்வியை பா.ஜனதா ஒப்புக்கொள்ள வேண்டும் என்று சிவசேனா வலியுறுத்தி உள்ளது.
தேர்தல் முடிவுகள்
மராட்டியத்தில் சுமார் 28 ஆயிரம் கிராம பஞ்சாயத்துகளில், பதவி காலம் முடிந்த 14 ஆயிரத்து 234 கிராம பஞ்சாயத்துகளுக்கு கடந்த 15-ந் தேதி தேர்தல் நடந்தது. நேற்று முன்தினம் வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது.
இதில் சிவசேனா தலைமையிலான மகா விகாஸ் அகாடி கூட்டணி வேட்பாளர்கள் அதிக இடங்களை கைப்பற்றியதாக கூறப்பட்டது.
உரிமை கோரினஇதுகுறித்து மாநில காங்கிரஸ் தலைவரும், வருவாய் துறை மந்திரியுமான பாலசாகேப் தோரட் கூறுகையில், எங்களது கூட்டணி 80 சதவீத இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் மட்டும் 4 ஆயிரம் கிராம பஞ்சாயத்துகளை கைப்பற்றி உள்ளது என்று கூறினார்.
எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் கூறுகையில், பா.ஜனதா தனிப்பெரும் கட்சியாக கிராம பஞ்சாயத்து தேர்தலில் வெற்றிபெற்று உள்ளது. இதன் மூலம் கிராமப்புறங்களில் பா.ஜனதா வலுவாக உள்ளது. ஆளும் கூட்டணிக்கு வாக்காளர்கள் தக்க பதிலடி கொடுத்துள்ளனர், என்றார்.
கட்சி சின்னம் கிடையாது என்பதால் கட்சிகளின் வெற்றி தோல்வி நிலவரத்தை தேர்தல் கமிஷனால் வெளியிட முடியாத நிலையில், ஆளும் கூட்டணியும், எதிர்க்கட்சியான பா.ஜனதாவும் தேர்தல் வெற்றியை உரிமைக்கோரி உள்ளன.
சிவசேனா கருத்துஇந்த நிலையில் சிவேசனா கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான சாம்னா தலையங்கத்தில் நேற்று கூறியிருப்பதாவது:-
கிராம பஞ்சாயத்து தேர்தலில் மகா விகாஸ் அகாடி கூட்டணி மிகப்பெரிய வெற்றியை கண்டு உள்ளது. இதன் மூலம் எங்கள் கூட்டணி அரசை மக்கள் ஏற்றுக்கொண்டு உள்ளனர். மரத்வாடா, விதர்பா மண்டலங்களில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் கோலோச்சி உள்ளன. கொங்கன் மண்டலத்தில் சிவசேனா அதிக இடங்களை கைப்பற்றி உள்ளது. சில இடங்களில் ஏற்பட்ட தோல்வி குறித்து ஆய்வு செய்யப்படும்.
அமலாக்கத்துறை, சி.பி.ஐ. போன்ற மத்திய விசாரணை அமைப்புகள் மூலம் எங்களது கூட்டணி கட்சி தலைவர்களை ஒடுக்க நினைத்ததை மக்கள் நிராகரித்து உள்ளனர்.
ஒப்புக்கொள்ள வேண்டும்பா.ஜனதா இந்த தேர்தலில் தோல்வியை தழுவி உள்ளது. தோல்வியை அந்த கட்சி ஒப்புக்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், அதுவரை மக்கள் அமைதி காக்க மாட்டார்கள். ராவ் சாகேப் தன்வே, ராதாகிருஷ்ண விகே பாட்டீல், சந்திரகாந்த் பாட்டீல், ராம்ஷிண்டே, நிதேஷ் ரானே போன்ற தலைவர்களின் சொந்த மாவட்டங்களிலும் கூட பா.ஜனதா தோல்வியை கண்டு உள்ளது. இது உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசுக்கு சாதகமான தீர்ப்பு என்பதை தவிர்த்து வேறு என்ன கூற முடியும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.