14 ஆயிரம் கிராம பஞ்சாயத்து தேர்தல் முடிவுகள்: 6 ஆயிரம் பஞ்சாயத்துகளை கைப்பற்றியதாக கூறும் பா.ஜனதா; எங்களுக்கு தான் முதலிடம்- தேசியவாத காங்கிரஸ்
14 ஆயிரம் கிராம பஞ்சாயத்து தேர்தல் முடிவுகளில் 6 ஆயிரம் பஞ்சாயத்துகளில் வெற்றி பெற்றதாக பா.ஜனதா கூறுகிறது. அதே வேளையில் எங்களுக்கு தான் முதலிடம் என்று தேசியவாத காங்கிரஸ் சொல்கிறது.
கட்சி சின்னம் கிடையாது
மராட்டியத்தில் சுமார் 14 ஆயிரம் கிராம பஞ்சாயத்துகளுக்கு கடந்த 15-ந் தேதி தேர்தல் நடந்தது. இதில் பதிவான வாக்குகள் நேற்று முன்தினம் எண்ணப்பட்டன. இந்த தேர்தலில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி வைத்து போட்டியிட்டன.
கிராம பஞ்சாயத்து தேர்தலில் வேட்பாளர்களுக்கு அரசியல் கட்சி சின்னம் ஒதுக்கப்படாது என்பதால், தேர்தல் கமிஷன் ஒதுக்கிய சின்னத்தில் அரசியல் கட்சி வேட்பாளர்களும் போட்டியிட்டனர். இதனால் எந்தெந்த கட்சி எத்தனை இடங்களில் வெற்றி பெற்றது என்பதை தேர்தல் கமிஷனால் தெரிவிக்க முடியாது.
பா.ஜனதா
தேர்தல் முடிவுகள் வெளியான போது, ஆளும் கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்றதாக தெரியவந்தது. பா.ஜனதா தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்றுள்ளது என்று அக்கட்சி தெரிவித்து இருந்தது.
இந்த நிலையில் நேற்று அரசியல் கட்சிகள் தாங்களது வெற்றி நிலவரம் குறித்து கருத்து தெரிவித்தன.
அதன்படி பா.ஜனதா 6 ஆயிரத்துக்கும் அதிகமான கிராம பஞ்சாயத்துகளில் வெற்றியை கண்டு முதலிடத்தில் இருப்பதாக அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் கேசவ் உபாத்யே தெரிவித்தார்.
தேசியவாத காங்கிரஸ்
தேசியவாத காங்கிரஸ் மாநில தலைவரான மந்திரி ஜெயந்த் பாட்டீல் கூறியதாவது:-
கிராம பஞ்சாயத்து தேர்தலில் எங்களது கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. மேலும் எங்களது தேசியவாத காங்கிரஸ் கட்சி தான் முதலிடத்தை பிடித்து உள்ளது. அதன்படி தேசியவாத காங்கிரஸ் 3 ஆயிரத்து 276 கிராம பஞ்சாயத்துகளில் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் எங்களது கட்சி கிராமப்புற அளவில் வலுவாக உள்ளது.
சிவசேனா 2 ஆயிரத்து 406 கிராம பஞ்சாயத்துகளை கைப்பற்றி உள்ள நிலையில், காங்கிரஸ் 1,938 கிராம பஞ்சாயத்துகளில் வெற்றி பெற்று உள்ளது. பா.ஜனதா 2 ஆயிரத்து 942 கிராம பஞ்சாயத்துகளை கைப்பற்றி இருக்கிறது. இது தான் என்னிடம் உள்ள தகவல். எங்களது கூட்டணி கைப்பற்றிய இடங்களில் பா.ஜனதா 20 சதவீத இடங்களில் கூட வெற்றி பெறவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
காங்கிரஸ் கருத்து
காங்கிரஸ் மாநில தலைவரும், மந்திரியுமான பாலசாகேப் தோராட் நேற்று முன்தினம் கூறுகையில், எங்களது கூட்டணி அபார வெற்றியை கண்டுள்ள நிலையில், காங்கிரஸ் மட்டும் 4 ஆயிரம் கிராம பஞ்சாயத்துகளை கைப்பற்றியதாக கூறியது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே இந்திய குடியரசு கட்சி 60 கிராம பஞ்சாயத்துகளை கைப்பற்றி இருப்பதாக அக்கட்சியின் தலைவரும், மத்திய மந்திரியுமான ராம்தாஸ் அத்வாலே கூறியுள்ளார்.
Related Tags :
Next Story