இன்று காஞ்சீபுரம் வருகை தரும் முதல்-அமைச்சருக்கு சிறப்பான வரவேற்பு


முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி
x
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி
தினத்தந்தி 19 Jan 2021 9:56 PM GMT (Updated: 19 Jan 2021 9:56 PM GMT)

2021 சட்டமன்ற தேர்தலை சந்திக்க அரசியல் கட்சி தலைவர்கள் தயாராகி வருகின்றனர். அந்த வகையில் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஆசியுடன் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மாவட்ட வாரியாக தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

இன்று (புதன்கிழமை) காலை சென்னையில் இருந்து கார் மூலம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஸ்ரீபெரும்புதூர் வருகை தருகிறார். அங்கு உள்ள புகழ் பெற்ற ஆதிகேசவ பெருமாள் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்கிறார்.

அதன் பின்னர் ஸ்ரீபெரும்புதூர் பஜாரில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்தவெளியில் தேர்தல் பிரசாரம் செய்கிறார். பின்னர் படப்பை, வாலாஜாபாத்தில் தேர்தல் பிரசாரம் செய்துவிட்டு முத்தியால்பேட்டை செல்கிறார்.

அங்கு அவருக்கு காஞ்சீபுரம் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளரும், ஆன்மிக பிரமுகருமான முத்தியால்பேட்டை ஆர்.வி.ரஞ்சித் குமார் தலைமையில் 2 ஆயிரத்து 500 பெண்கள் ஆளுயர மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளிக்க உள்ளனர். அங்குள்ள பிரசன்ன ஆஞ்சநேயரை முதல்-அமைச்சர் வணங்குகிறார்.

பின்னர் அவர் அண்ணா நினைவிடத்துக்கு செல்கிறார். அங்கு அவரை மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் வரவேற்கிறார்.

அண்ணா நினைவு இல்லத்துக்கு சென்று அண்ணா பயன்படுத்திய பொருட்கள் மற்றும் அரிய புகைப்படங்களையும் முதல்-அமைச்சர் பார்வையிடுகிறார்.

அண்ணா நினைவு இல்லத்தை சுற்றி பார்த்துவிட்டு காஞ்சீபுரம் காந்தி ரோடு தேரடிக்கு செல்கிறார். ஆஞ்சநேயர் கோவில் அருகே திறந்த வேனில் தேர்தல் பிரசாரம் செய்கிறார்.

பின்னர் அங்கு இருந்து காந்தி ரோட்டில் உள்ள நட்சத்திர ஓட்டலுக்கு செல்லும் அவர் விவசாயிகள், நெசவாளர்கள் சிறு வணிகர்கள் மற்றும் பிரமுகர்களை சந்திக்கிறார்.

அங்கு இருந்து புறப்பட்டு ஓரிக்கை வழியாக உத்திரமேரூர் செல்கிறார். காஞ்சீபுரம் மாவட்டத்திற்கு தேர்தல் பிரசாரம் செய்ய வருகை தரும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மாவட்டத்தில் ஆங்காங்கே செல்லும் இடங்களில் வரவேற்பு ஏற்பாடுகளை மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும் முன்னாள் அமைச்சருமான வி.சோமசுந்தரம் செய்துள்ளார்.

Next Story