காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை நகல் எரிக்கும் போராட்டம் சாமிநாதன் எம்.எல்.ஏ. அறிவிப்பு
வருகிற 22-ந்தேதி காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை நகல் எரிக்கும் போராட்டம் நடத்தப்போவதாக சாமிநாதன் எம்.எல்.ஏ. தெரிவித்தார்.
புதுவை மாநில பா.ஜ.க. தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ. நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
ஜே.பி.நட்டா வருகைபா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா 28 அல்லது 29-ந்தேதி புதுச்சேரிக்கு வருவதாக உள்ளது. அப்போது காங்கிரஸ் இல்லாத புதுச்சேரி என்ற கோஷத்துடன் பொதுக்கூட்டம் நடைபெறும்.
கடந்த தேர்தலில் ஏராளமான வாக்குறுதிகளை அளித்து காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தது. ஆனால் எதையும் செயல்படுத்தவில்லை. இந்த பொய் வாக்குறுதிகளில் 50 சதவீதம் தி.மு.க.வுக்கும் பங்கு உள்ளது. ஆனால் ஜெகத்ரட்சகன் எம்.பி. 30 தொகுதிகளிலும் ஜெயிப்போம் என்கிறார்.
தேர்தல் அறிக்கைபுதுவையில் பா.ஜ.க. கூட்டணி ஆட்சிக்கு வந்தால்தான் பிரச்சினைகள் தீரும். காங்கிரஸ் அரசை கண்டித்து இன்று (புதன்கிழமை) 30 தொகுதிகளிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். வருகிற 22-ந்தேதி இந்திராகாந்தி சதுக்கத்தில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் (அறிக்கை) வாக்குறுதி நகல் எரிக்கும் போராட்டம் நடைபெறும்.
24, 25, 26-ந் தேதிகளில் கேந்திர பொறுப்பாளர்கள் கூட்டமும், 26, 27, 28-ந்தேதிகளில் தொகுதிதோறும் செயல்வீரர்கள் கூட்டமும் நடைபெறும். 30 தொகுதிகளுக்கும் தேர்தல் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தீர்மானங்கள் செல்லாதுசட்டசபையில் எதிர்க்கட்சிகள் இல்லாமல் 2 தீர்மானங்களை நிறைவேற்றி உள்ளனர். போதிய எம்.எல்.ஏ.க்கள் இல்லாமல் நிறைவேற்றப்பட்டுள்ள இந்த தீர்மானங்கள் செல்லாது.
மதுக்கடைகளை திறக்க அமைச்சர்கள் நேரடியாக கவர்னரிடம் சென்றார்கள். ஆனால் வேறு எதற்கும் அவர்கள் செல்வதில்லை.
இவ்வாறு சாமிநாதன் எம்.எல்.ஏ. கூறினார்.
பேட்டியின்போது பொதுச்செயலாளர்கள் ஏம்பலம் செல்வம், மோகன்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.