கிருமாம்பாக்கம், கரிக்கலாம்பாக்கத்தில் அமைச்சரின் ஆதரவாளர்கள் திடீர் சாலை மறியல்


கிருமாம்பாக்கத்தில் அமைச்சர் கந்தசாமியின் ஆதரவாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்ட போது எடுத்த படம்.
x
கிருமாம்பாக்கத்தில் அமைச்சர் கந்தசாமியின் ஆதரவாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்ட போது எடுத்த படம்.
தினத்தந்தி 20 Jan 2021 3:55 AM IST (Updated: 20 Jan 2021 3:55 AM IST)
t-max-icont-min-icon

அமைச்சர் கந்தசாமியின் ஆதரவாளர்கள் கிருமாம்பாக்கம், கரிக்கலாம்பாக்கத்தில் திடீரென சாலைமறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சாலை மறியல்

அமைச்சர் கந்தசாமி சட்டமன்ற வளாகத்தில் கடந்த 10 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றவும், கவர்னர் கிரண்பெடியை சந்திக்க, அனுமதி கேட்டும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

இந்தநிலையில் நேற்று ஏம்பலம் தொகுதி கிருமாம்பாக்கம் 4 முனை சந்திப்பில் அமைச்சர் கந்தசாமியின் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். அப்போது அவர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு கடலூர்-புதுச்சேரி செல்லும் வாகனங்கள் போக்குவரத்து நெருக்கடியில் சிக்கித் தவித்தன.

பரபரப்பு

கவர்னர் கிரண்பெடியை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும். கவர்னரை சந்திக்க அமைச்சர் கந்தசாமிக்கு அனுமதி வழங்க வேண்டும் என மறியலில் ஈடுபட்டவர்கள் கோஷங்களை எழுப்பினர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் தெற்குப்பகுதி போலீஸ் சூப்பிரண்டு லோகேஸ்வரன், இன்ஸ்பெக்டர்கள் வரதராஜன், தனசெல்வம், தன்வந்திரி மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்து சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அதை ஏற்க மறுத்து தொடர்ந்து அவர்கள் மறியலில் ஈடுபட்டனர்.

இதையடுத்து அவர்களை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கி கைது செய்தனர். மாலையில் அவர்களை விடுவித்தனர்.

கரிக்கலாம்பாக்கம்

இதேபோல் கரிக்கலாம்பாக்கம் 4 ரோடு சந்திப்பில் காங்கிரஸ், கூட்டணி கட்சியை சேர்ந்த குமரேசன், நடராஜன், ராமமூர்த்தி உள்பட 100-க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து 100-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். மாலையில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.


Next Story