கீழப்பழுவூர் அருகே ஆட்டு வியாபாரி கொலை வழக்கில் நண்பர் கைது


கீழப்பழுவூர் அருகே ஆட்டு வியாபாரி கொலை வழக்கில் நண்பர் கைது
x
தினத்தந்தி 20 Jan 2021 6:50 PM IST (Updated: 20 Jan 2021 6:50 PM IST)
t-max-icont-min-icon

கீழப்பழுவூர் அருகே ஆட்டு வியாபாரி கொலை வழக்கில் அவருடைய நண்பரை போலீசார் கைது செய்தனர்.

கீழப்பழுவூர், 

அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட மேலவண்ணம் கிராமத்தை சேர்ந்த தர்மராஜின் மகன் பழனிசாமி(வயது 35). ஆட்டு வியாபாரியான இவர் ஆடுகள் வளர்த்து வந்தார். அந்த ஆடுகளை, அவர் தினமும் மேய்ச்சலுக்கு ஓட்டிச்செல்வது வழக்கம். இதேபோல் நேற்று முன்தினம் மேலேவண்ணம் கிராமத்தில் இருந்து கீழப்பழுவூர் செல்லும் சாலைகளின் இடையே உள்ள தரிசு நிலங்களுக்கு ஆடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச் சென்றார்.

நேற்று முன்தினம் மாலை அங்கு அவரது நண்பருடன் சேர்ந்து மது குடித்தார். அப்போது அவர்களுக்குள் வாய்த்தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இதில் பழனிசாமியின் கழுத்தை அறுத்து விட்டு, அவருடைய நண்பர் தப்பிச்சென்றார். இதில் உயிருக்கு போராடிய பழனிசாமியை, அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து கீழப்பழுவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதில் பழனிசாமி, தனது நண்பரான அதே கிராமத்தை சேர்ந்த நாகராஜனின் மகன் பழனிவேலுடன்(40) சேர்ந்து மது குடித்து தெரியவந்தது. இதையடுத்து பழனிவேலை பிடித்து போலீசார் விசாரித்தனர். விசாரணையில், பழனிசாமியிடம் பழனிவேல் கடந்த நவம்பர் மாதம் தீபாவளியன்று ஆடு வாங்கி, அதற்கான பணத்தை கொடுக்காமல் இருந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பொங்கல் பண்டிகைக்காக மற்றொரு ஆடு கொடுக்குமாறு பழனிவேல் கேட்டுள்ளார். அதற்கு பழனிசாமி தீபாவளியின்போது கொடுத்த ஆட்டிற்கான பணத்தை கொடுக்குமாறு கேட்டுள்ளார். இது ெதாடர்பாக அவர்களுக்கு இடையே பிரச்சினை இருந்துள்ளது.

இந்நிலையில் நேற்று முன்தினம் அவர்கள் மது குடித்தபோது, அந்த பிரச்சினை தொடர்பாக அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, கைகலப்பாக மாறியுள்ளது. அப்போது பழனிவேல் தான் வைத்திருந்த கத்தியால் பழனிசாமியின் கழுத்தை அறுத்து விட்டு தப்பிச்சென்றுவிட்டது, விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் ெதரிவித்தனர். இதனையடுத்து போலீசார், பழனிவேலை கைது செய்து அரியலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி நேற்று சிறையில் அடைத்தனர்.

முன்னதாக இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் மற்றும் துணை சூப்பிரண்டு மதன் ஆகியோர் உத்தரவின்பேரில் கீழப்பழுவூர் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் விரைந்து விசாரணை நடத்தி, பழனிவேலை கைது செய்தனர். இதையடுத்து நேற்று துணை சூப்பிரண்டு மதன், தனிப்படை போலீசாரை பாராட்டி, சான்றிதழும் ஊக்கத் தொகையும் வழங்கினார்.

Next Story