சிறையில் இருந்து சசிகலா வெளியே வந்த பிறகு ‘அ.தி.மு.க. ஆட்சி இருக்குமா?, இல்லையா? என்பது தெரிந்துவிடும்’ - மு.க.ஸ்டாலின் பேச்சு


சிறையில் இருந்து சசிகலா வெளியே வந்த பிறகு ‘அ.தி.மு.க. ஆட்சி இருக்குமா?, இல்லையா? என்பது தெரிந்துவிடும்’ - மு.க.ஸ்டாலின் பேச்சு
x
தினத்தந்தி 20 Jan 2021 9:58 PM IST (Updated: 20 Jan 2021 9:58 PM IST)
t-max-icont-min-icon

சிறையில் இருந்து சசிகலா வெளியே வந்த பிறகு அ.தி.மு.க. ஆட்சி இருக்குமா?, இல்லையா? என்பது தெரிந்துவிடும் என்று மு.க.ஸ்டாலின் பேசினார்.

நாமக்கல்,

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் தொகுதிக்கு உட்பட்ட பாதரை ஊராட்சியில் நேற்று மக்கள் கிராமசபை கூட்டம் நடந்தது.

இ்தில் தி.மு.க. தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பேசியதாவது:-

ஏற்கனவே நாடாளுமன்ற தேர்தலை சந்தித்தபோது, இதேபோல் ஊராட்சி சபை கூட்டத்தை தமிழ்நாடு முழுவதும் நடத்தினோம். இதேபோல் நான் பல ஊராட்சிகளுக்கு சென்றேன். 50-க்கும் மேற்பட்ட ஊராட்சிகளுக்கு நான் சென்றேன்.

12,600-க்கும் மேற்பட்ட ஊராட்சிகள் தமிழ்நாட்டில் இருக்கிறது. இந்த அனைத்து ஊராட்சிகளிலும் நாம் கிராமசபை கூட்டத்தை நடத்தினோம். அதனுடைய பலன் தான், நாடாளுமன்றத்தில் தி.மு.க. அணி மிகப்பெரிய வெற்றி பெற்றது. பெருமையாக சொல்ல வேண்டுமென்றால், இந்தியாவிலேயே இன்றைக்கு நாடாளுமன்றத்தில் 3-வது பெரிய கட்சி நம்முடைய தி.மு.க. தான். அங்கே 3-வது இடம் பெற்றது மட்டுமல்லாமல் அதன்பிறகு நடந்த உள்ளாட்சி தேர்தலிலும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் நாம் வெற்றி பெறப்போகிறோம் என்பதற்கு அடையாளம்தான் இந்த கூட்டம். இந்த கூட்டத்திற்கு நீங்கள் ஒரு முடிவோடு வந்திருக்கிறீர்கள். அமைதியாக, கட்டுப்பாட்டோடு நீங்கள் இருக்கின்ற காட்சியை பார்க்கின்றபோது நிச்சயமாக நாம் தான் வெற்றி பெறப் போகிறோம். அதில் எந்த மாற்றமும் இல்லை என்பது உறுதியாக தெரிகிறது.

நிச்சயமாக உங்கள் நம்பிக்கையோடு தி.மு.க. ஆட்சிக்கு வரப்போகிறது. அதில் எந்த மாற்றமும் இல்லை. ஆட்சிக்கு வந்தபிறகு, நிச்சயம் ‘நீட்’ ஒழிப்பிற்காக போராடுவோம். அதில் எந்த மாற்றமும் இல்லை.

சமீபத்தில், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்பட சில அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுகளை எல்லாம், ஆதாரங்களோடு, ஊழல் புகார் பட்டியலை கவர்னரிடத்தில் கொடுத்திருக்கிறோம்.

கொடுக்கப்பட்டு கிட்டதட்ட 2 மாதம் ஆகிறது. இது தவறு என்றால் எங்கள் மீது அவர்கள் வழக்குப்போட்டு இருக்கலாம். ஸ்டாலின் சொல்வது, தி.மு.க. சொல்வது அனைத்தும் தவறு. எனவே நாங்கள் வழக்கு போடுகிறோம் என்று சொல்லி வழக்கு போட்டிருக்கலாம். இதுவரைக்கும் அவர்கள் வழக்கு போடவில்லை.

ஏன் வழக்கு போடவில்லை? ஆகவே தவறு நடந்திருக்கிறது. இது எல்லாம் உண்மை என்பது நாட்டு மக்களுக்கு நன்றாக தெரியும். அதில் முக்கியமாக சொல்ல வேண்டுமென்றால் தரமற்ற நிலக்கரி வாங்கியதில், போலி மின்சார கணக்கில் ஊழல் உள்ளிட்ட ரூ.950.26 கோடி ஊழல் நடந்திருக்கிறது என்று நான் சொல்லி இருக்கிறேன்.

அமைச்சர் தங்கமணி தமிழகம் ‘மின் மிகை’ மாநிலமாக இருக்கிறது என்று தொடர்ந்து சொல்லி கொண்டிருக்கிறார். இது பொய் மட்டுமல்ல; ஆகாய அளவிற்கான பொய். தன்னுடைய தவறு எல்லாம் வெளியே வரக்கூடாது என்பதற்காகத்தான் இவ்வாறு சொல்லி கொண்டிருக்கிறார்.

நீங்கள் வேண்டுமென்றால் பாருங்கள், நாம் 4 மாதம் கூட பொறுத்து இருக்க வேண்டிய அவசியம் இல்லை. சசிகலா வெளியே வந்தவுடன் இந்த ஆட்சி இருக்கிறதா? இல்லையா? என்பது தெரியப்போகிறது என்ற நிலை இன்றைக்கு உருவாகி இருக்கிறது. இந்த நிலையில் தான் இன்றைக்கு இந்த ஆட்சி சென்றுகொண்டிருக்கிறது. எதைப்பற்றியும் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. நமக்கு வெற்றி உறுதியாகி இருக்கிறது.

அந்த வெற்றிக்கு நீங்கள் எல்லாம் துணை நிற்க வேண்டும். நிச்சயமாக நிற்பீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.

Next Story