கள்ளக்குறிச்சி மாவட்ட இறுதி வாக்காளா் பட்டியல் வெளியீடு
கள்ளக்குறிச்சி மாவட்ட இறுதி வாக்காளா் பட்டியலை கலெக்டா் கிரண்குராலா வெளியிட்டாா்.
கள்ளக்குறிச்சி,
கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம், சங்கராபுரம், கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சி கள்ளக்குறிச்சியில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இதில் மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான கிரண்குராலா கலந்து கொண்டு அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டார்.
அதன்பிறகு கலெக்டர் கிரண்குராலா நிருபர்களிடம் கூறியதாவது:-
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட இடங்களில் 1-1-2021 தேதியை தகுதி ஏற்பு நாளாக கொண்டு வாக்காளர் பெயர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தப் பணி 16.11.2020 தேதி முதல் 15.12.2020 தேதி வரை 18 வயது நிரம்பியவர்கள் மற்றும் அதற்கு மேல் உள்ள வாக்காளர் பெயர்களை சேர்த்தல், நீக்கல், திருத்தம் பணி மேற்கொள்ளப்பட்டு இறுதி வாக்காளர் பட்டியல் தயார் செய்யப்பட்டது.
அதன்படி 16.11.2020-ந்தேதி வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் 5 லட்சத்து 43 ஆயிரத்து 472 ஆண் வாக்காளர்களும், 5 லட்சத்து 36 ஆயிரத்து 851 பெண் வாக்காளர்களும், இதர வாக்காளர்கள் 202 பேர் என ஆக மொத்தம் 10 லட்சத்து 80 ஆயிரத்து 525 பேர் இருந்தனர். இதில் திருத்தம் பணிகள் மேற்கொள்ளப்பட்டு மொத்தம் 4 ஆயிரத்து 595 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
தற்போது நடைபெற்ற சிறப்பு சுருக்கமுறை திருத்தத்தின்படி படிவம்-6 மூலம் புதிதாக சேர்க்கப்பட்ட ஆண் வாக்காளர்கள் 17 ஆயிரத்து 478 பேர், பெண் வாக்காளர்கள் 20 ஆயிரத்து 552 பேர் மற்றும் இதர வாக்காளர்கள் 16 பேர் என கூடுதலாக 38 ஆயிரத்து 46 வாக்காளர்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர். இதன்படி நேற்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளில் ஆண் வாக்காளர்கள் 5 லட்சத்து 58 ஆயிரத்து 394 பேரும், பெண் வாக்காளர்கள் 5 லட்சத்து 55 ஆயிரத்து 371 பேரும், இதர வாக்காளர் 211 பேரும் என மொத்தம் 11 லட்சத்து 13 ஆயிரத்து 976 பேர் உள்ளனர்.
நேற்று வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியல் கள்ளக்குறிச்சி மாவட்ட தேர்தல் அலுவலர் அலுவலகம் மற்றும் மாவட்ட கலெக்டர் அலுவலகம், வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் சப்-கலெக்டர், கோட்டாட்சியர் அலுவலகம், உதவி வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகம் மற்றும் தாலுகா அலுவலகங்கள், உதவி வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் நகராட்சி அலுவலகம் கள்ளக்குறிச்சி மற்றும் நியமன வாக்குச்சாவடி அமைவிடங்கள் ஆகிய இடங்களில் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தப்பணி தொடர்ந்து நடைபெறும். பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை உரிய படிவத்தில் அனைத்து வாக்காளர் பதிவு அலுவலர், உதவி வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் வாக்குச்சாவடி நிலை அலுவலர் ஆகியோரிடம் தெரிவிக்கலாம். மேலும் புதிதாக விண்ணப்பிக்க உள்ள வாக்காளர்கள் இந்திய தேர்தல் ஆணைய இணையதளம் முகவரியான www.nvsp.in வாயிலாகவும் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும் வாக்காளர் சேவை மையத்தின் 1950 என்ற தொலைபேசிஎண்ணில் தொடர்பு கொண்டு தகவல்களை பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு கலெக்டர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் சப்-கலெக்டர் ஸ்ரீகாந்த், மாவட்ட வருவாய் அலுவலர் சங்கீதா, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சுரேஷ், தேர்தல் தனி தாசில்தார் மணிகண்டன், தாசில்தார்கள் பிரபாகரன், வளர்மதி, ராஜலட்சுமி மற்றும் அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் தேவேந்திரன், தி.மு.க. ஒன்றிய செயலாளர் வெங்கடாசலம், தி.மு.க. நகர செயலாளர் சுப்ராயலு, தே.மு.தி.க. ஒன்றிய செயலாளர் நல்லதம்பி மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story