குடும்பத்தகராறில் போட்டி போட்டு விஷம் குடித்தனர்; கர்ப்பிணி தற்கொலை; கணவர் ஆஸ்பத்திரியில் அனுமதி
குடும்பத்தகராறில் போட்டி போட்டு விஷம் குடித்த கர்ப்பிணி தற்கொலை செய்து கொண்டார். அவரது கணவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குடும்பத்தகராறு
குன்றத்தூர் அடுத்த தண்டலம், மணிமேடு பகுதியை சேர்ந்தவர் பூபதி தாஸ் என்ற கமல் (வயது 26), கார் டிரைவராக வேலை செய்து வந்தார். இவரது மனைவி துர்கா (22). திருமணம் நடந்தது முதல் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வாக்குவாதம் முற்றியது.
இதில் ஆத்திரம் அடைந்த பூபதி தாஸ் வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து குடித்து தற்கொலை செய்து கொள்ள போவதாக மனைவியிடம் கூறியுள்ளார்.
தற்கொலைஇதை பார்த்த அவரது மனைவி துர்கா அந்த விஷ பாட்டிலை வாங்கி முதலில் குடித்தார். இதையடுத்து பூபதி தாசும் அந்த விஷத்தை வாங்கி போட்டி போட்டு குடித்து விட்டு இருவரும் வாந்தி எடுத்தபடி மயங்கி கிடந்தனர். பூபதி தாசின் பெற்றோர் வீட்டுக்கு வந்து பார்த்தபோது இருவரும் மயங்கிய நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்ததில் துர்கா இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
பூபதி தாஸ் கவலைக்கிடமான நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து குன்றத்தூர் சப்-இன்ஸ்பெக்டர் அந்தோனி சகாய பாரத் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
துர்கா 5 மாத கர்ப்பிணி என்று கூறப்படுகிறது. போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.