300 நாட்களுக்கு பிறகு 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிக்கூடங்கள் திறப்பு


300 நாட்களுக்கு பிறகு 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிக்கூடங்கள் திறப்பு
x

300 நாட்களுக்கு பிறகு 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிக்கூடங்கள் நேற்று முதல் திறக்கப்பட்டு இருக்கின்றன. அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வகுப்புகள் நடத்தப்பட்டன.

தஞ்சாவூர்,

கொரோனா நோய்த் தொற்று காரணமாக கடந்த ஆண்டு (2020) மார்ச் மாதம் 3-வது வாரம் முதல் தமிழகத்தில் பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டன. தொடர்ந்து நோய்த் தொற்றின் தாக்கம் குறையாமல் இருந்ததால் பள்ளிகளும் தொடர்ந்து மூடப்பட்டே இருந்தன.

தற்போது கொரோனா தாக்கம் குறைந்து இருப்பதால் பெற்றோரிடம் கருத்துகள் கேட்கப்பட்டன. அவர்கள் கூறிய கருத்துகளின் அடிப்படையில், பள்ளிகளை திறப்பதற்கு அரசு முடிவெடுத்து அறிவித்தது. அதன்படி, தமிழகம் முழுவதும் உள்ள உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் நேற்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு இருக்கின்றன.

வகுப்பறையில் 25 மாணவர்கள்

பள்ளிகள் திறப்பின் போது பின்பற்ற வேண்டிய அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் ஏற்கனவே வெளியிடப்பட்டு இருந்தன. அதனை பின்பற்றியே நேற்று தமிழகம் முழுவதும் உள்ள 12 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட பள்ளிகள் திறக்கப்பட்டன.

ஒரு வகுப்பறைக்கு 25 மாணவ-மாணவிகள் மட்டுமே அனுமதி என்று அரசின் வழிகாட்டு நெறிமுறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படியே, ஒவ்வொரு வகுப்பறைகளிலும் 25 மாணவ-மாணவிகள் அமருவதற்கு ஏதுவாக இடைவெளிகள் பின்பற்றப்பட்டு இருந்தன. ஒரு மேஜைக்கு 2 மாணவர்கள் வீதம் ஒரு அறையில் 25 மாணவர்களுக்கும் குறைவான அளவிலேயே அமர்ந்து இருந்தனர்.

ஊக்கப்படுத்தும் பேச்சுகள்

மாணவ-மாணவிகள் 300 நாட்களுக்கு பிறகு பள்ளிகளுக்கு வருவதால் உற்சாக மிகுதியில் நண்பர்களை கட்டித்தழுவி மகிழ்ச்சியை வெளிப்படுத்தி விடக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு சமூக இடைவெளியை அவர்கள் பின்பற்றுவதை உறுதி செய்ய பள்ளிகளில் கண்காணிப்பு குழுவும் ஏற்படுத்தப்பட்டு இருந்தது. அவர்கள் மாணவ-மாணவிகள் ஒன்றாக கூடி பேசுவதை தவிர்க்கவும், பள்ளி வளாகங்களில் சமூக இடைவெளியை பின்பற்றுவதையும் கண்காணித்தனர்.

சில பள்ளிகளில் மாணவ-மாணவிகள் வகுப்பறைக்கு செல்வதற்கு முன்பாக வழிகாட்டு நெறிமுறைகளின் படி, பின்பற்ற வேண்டியவை எவை? செய்யக்கூடாதவை எவை? போன்றவை அடங்கிய துண்டு பிரசுரங்களும் மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்பட்டன. மேலும் சில பள்ளிகளில் மாணவர்களை உற்சாகப்படுத்தும் விதமாக சில கலை நிகழ்ச்சிகள், ஊக்கப்படுத்தும் பேச்சுகள் ஆகியவையும் நடத்தப்பட்டன.

402 பள்ளிகள் திறப்பு

தஞ்சை மாவட்டத்தில் 227 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள், 62 அரசு உதவி பெறும் பள்ளிகள், 97 மெட்ரிக் பள்ளிகள், 28 சி.பி.எஸ்.இ. பள்ளிகள், 24 சுயநிதி பள்ளிகள் என 438 பள்ளிகளை திறக்க அனுமதி அளிக்கப்பட்டது. இந்த பள்ளிகளில் 36 பள்ளிகளை தவிர மீதமுள்ள 402 பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டன. 300 நாட்களுக்கு பிறகு பள்ளிகளுக்கு மாணவ, மாணவிகள் உற்சாகத்துடன் சென்றனர்.மாணவிகள் பலரை பெற்றோர்கள் இருசக்கர வாகனங்களில் அழைத்து வந்து பள்ளிகளில் விட்டு சென்றனர். பள்ளிகளில் நுழைந்தவுடன் மாணவ, மாணவிகள் முககவசத்துடன் வருகிறார்களா? என ஆசிரியர்கள் கண்காணித்தனர். தஞ்சை அரண்மனை வளாகம் அரசினர் மேல்நிலைப்பள்ளி, பெண்கள் மேல்நிலைப்பள்ளி, தென்கீழ்அலங்கம் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட அனைத்து பள்ளிகளிலும் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு ஆசிரியர்கள் தெர்மல் ஸ்கேனர் கருவி கொண்டு உடல் வெப்பநிலை கண்காணிக்கப்பட்டது.

பதாகைகள்

பின்னர் சானிடைசர் கொண்டு கைகளை சுத்தம் செய்ய அறிவுறுத்தினர். மாணவர்களின் சுவாச திறன் எவ்வாறு உள்ளது என விரலில் சிறிய கருவியை மாட்டி, அளவீடு செய்யப்பட்டது. முககவசம் அணியாமல் வந்த மாணவர்களுக்கு பள்ளிகளிலேயே முககவசம் வழங்கப்பட்டது. பரிசோதனை முடிந்தவுடன் மாணவ-மாணவிகளை வகுப்பறைக்கு செல்ல அனுமதி அளித்தனர். வகுப்பறையில் ஒரு மேஜைக்கு 2 மாணவர்கள் வீதம் அமர வைக்கப்பட்டனர்.

பின்னர் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை எப்படி பின்பற்ற வேண்டும் என மாணவ, மாணவிகளை அறிவுறுத்தினர். பல பள்ளிகளின் வளாகத்தில் மாணவ, மாணவிகள் பின்பற்ற வேண்டியவை எவை? செய்யக்கூடாதவை எவை? போன்ற விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகள் தொங்கவிடப்பட்டிருந்தன.

கலெக்டர் ஆய்வு

மேலும் பஸ்களில் பயணம் செய்வதை முடிந்தவரை தவிர்க்க வேண்டும் எனவும், 2 கிலோமீட்டர் தூரத்திற்குள் பள்ளிகள் இருந்தால் சைக்கிள்களிலோ அல்லது பெற்றோர்களின் இருசக்கர வாகனங்கள் மூலமாகவே வந்தால் நலமாக இருக்கும் எனவும் மாணவ, மாணவிகளுக்கு தலைமை ஆசிரியர்கள் அறிவுறுத்தினர்.

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு தாலுகா மேலஉளூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் அரசு அறிவித்த கொரோனா நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றப்பட்டுள்ளதா? என கலெக்டர் கோவிந்தராவ் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது முதன்மைக்கல்வி அலுவலர் ராமகிரு‌‌ஷ்ணன் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் உள்ளனர்.

முதன்மைக்கல்வி அலுவலர் ஆய்வு

அதேபோல் தஞ்சை கல்யாணசுந்தரம் மேல்நிலைப்பள்ளி, ஓரியண்டல் மேல்நிலைப்பள்ளி, திருவையாறு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, சீனிவாசராவ் மேல்நிலைப்பள்ளி, கண்டியூர் அரசு மேல்நிலைப்பள்ளி, வீரமாங்குடி அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்பட்டுள்ளதா? என முதன்மைக்கல்வி அலுவலர் ராமகிரு‌‌ஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார்.

இதேபோல் திருக்காட்டுப்பள்ளி, பூதலூர் பகுதிகளிலும் பள்ளிகளுக்கு மாணவர்கள் ஆர்வத்துடன் வந்தனர்.

Next Story