ஏ.டி.எம். எந்திரத்தில் ‘ஸ்கிம்மர்’ கருவி மூலம் மோசடி; பல்கேரியா நாட்டு வாலிபர்களுக்கு 3 ஆண்டு சிறை; ஆலந்தூர் கோர்ட்டு தீர்ப்பு


ஏ.டி.எம். எந்திரத்தில் ‘ஸ்கிம்மர்’ கருவி மூலம் மோசடி; பல்கேரியா நாட்டு வாலிபர்களுக்கு 3 ஆண்டு சிறை; ஆலந்தூர் கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 20 Jan 2021 11:29 PM GMT (Updated: 20 Jan 2021 11:29 PM GMT)

சென்னை புறநகர் பகுதிகளில் ஏ.டி.எம். எந்திரத்தில் ‘ஸ்கிம்மர்’ கருவி மூலம் மோசடி செய்ததாக கைதான பல்கேரியா நாட்டு வாலிபர்கள் 3 பேருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து ஆலந்தூர் கோர்ட்டு உத்தரவிட்டது.

ஏ.டி.எம். மையத்தில் மோசடி

சென்னை புறநகர் பகுதிகளான செம்மஞ்சேரி, துரைப்பாக்கம், சோழிங்கநல்லூர் பகுதிகளில் கடந்த 2019-ம் ஆண்டு ஜூலை மாதம் கிரெடிட், டெபிட் கார்டுகளின் தரவுகளை ‘ஸ்கிம்மர்’ கருவி மூலம் திருடி, போலியான ஏ.டி.எம். கார்டுகளை தயாரித்து வங்கிகளின் ஏ.டி.எம். எந்திரங்களில் இருந்து ரூ.16 லட்சத்து 50 ஆயிரம் வரை மோசடி செய்யப்பட்டு உள்ளதாக மத்திய குற்றப்பிரிவுக்கு புகார் வந்தது.

அதன்பேரில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து போலியான ஏ.டி.எம். கார்டுகள் மூலம் பணத்தை மோசடி செய்து எடுத்ததை கண்டுபிடித்தனர்.

பல்கேரியா வாலிபர்கள்

இது தொடர்பாக பல்கேரியா நாட்டில் இருந்து சுற்றுலா விசாவில் வந்த நிக்கலே (வயது 30), பொரீஸ் (30), லைவ்போமீர் மக்சிமேவ் (33) ஆகியோரை அவர்கள் தங்கியிருந்த விடுதியின் மேலாளர் அளித்த தகவலின் பேரில் போலீசார் விசாரித்தனர்.

அப்போது அவர்கள் 3 பேரும் ஒரே வாரத்தில் ரூ.16 லட்சத்து 50 ஆயிரம் பணத்தை வங்கி ஏ.டி.எம்.களில் இருந்து மோசடியாக எடுத்து அமெரிக்க டாலர்களாக மாற்றி பல்கேரியாவிற்கு தப்பிச்செல்ல இருந்ததை கண்டுபிடித்தனர். இது தொடர்பாக 3 பேரையும் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து கணினி, போலியான கிரெடிட், டெபிட் கார்டுகளையும் கைப்பற்றினர்.

3 ஆண்டு சிறை

இது தொடர்பான வழக்கு ஆலந்தூர் குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அதில் பல்கேரியா நாட்டு வாலிபர்கள் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால் 3 பேருக்கும் 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை வழங்கி ஆலந்தூர் மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார்.

இதையடுத்து 3 பேரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.


Next Story