விழுப்புரம் மாவட்டத்தில் 9½ மாதங்களுக்கு பிறகு 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிக்கூடங்கள் திறப்பு + "||" + Opening of schools for 10th and 12th class students in Villupuram district after 90 months
விழுப்புரம் மாவட்டத்தில் 9½ மாதங்களுக்கு பிறகு 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிக்கூடங்கள் திறப்பு
விழுப்புரம் மாவட்டத்தில் 9½ மாதங்களுக்கு பிறகு பாதுகாப்பு அம்சங்களுடன் 10, 12-ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. இதில் கட்டுப்பாடுகளை பின்பற்றி மாணவ- மாணவிகள் உற்சாகமாக பள்ளிக்கு சென்றனர்.
விழுப்புரம்,
கொரோனா நோய்த் தொற்று காரணமாக கடந்த ஆண்டு (2020) மார்ச் மாதம் 3-வது வாரம் முதல் தமிழகத்தில் பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டன. தொடர்ந்து நோய்த் தொற்றின் தாக்கம் குறையாமல் இருந்ததால் பள்ளிகளும் தொடர்ந்து மூடப்பட்டே இருந்தன.
தற்போது கொரோனா தாக்கம் குறைந்து இருப்பதால் பெற்றோரிடம் கருத்துகள் கேட்கப்பட்டன. அவர்கள் கூறிய கருத்துகளின் அடிப்படையில், பள்ளிகளை திறப்பதற்கு அரசு முடிவெடுத்து அறிவித்தது. அதன்படி, தமிழகம் முழுவதும் உள்ள உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் நேற்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு இருக்கின்றன.
385 பள்ளிகள்
அந்த வகையில் விழுப்புரம் மாவட்டத்தில் அரசு, அரசு நிதி உதவி பெறும் பள்ளிகள், தனியார் மெட்ரிக் பள்ளிகள், சுயநிதி பள்ளிகள், சி.பி.எஸ்.இ. பள்ளிகள் என 192 உயர்நிலை, 193 மேல்நிலைப்பள்ளிகள் ஆக மொத்தம் 385 பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டன. இப்பள்ளிகளில் 25, 043 மாணவ- மாணவிகள் 10-ம் வகுப்பும், 21, 056 மாணவ- மாணவிகள் பிளஸ்-2 வகுப்பும் படித்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலான மாணவ- மாணவிகள் நேற்று உற்சாகத்துடனும், மகிழ்ச்சியுடனும் பள்ளிக்கு வந்தனர். ஒன்றிரண்டு மாணவ- மாணவிகள் மட்டும் பள்ளிக்கு வருகை தர இயலவில்லை. அதற்கான உரிய காரணத்தை மாணவ- மாணவிகள் மற்றும் அவர்களது பெற்றோர், சம்பந்தப்பட்ட பள்ளிக்கு தகவல் தெரிவித்தனர்.
மாணவர்களுக்கு வரவேற்பு
பள்ளி நுழைவுவாயில் பகுதிகளில் ஆசிரியர்கள் தெர்மல் ஸ்கேனர் கருவி கொண்டு கண்காணித்தனர். பின்னர் சானிடைசர் கொண்டு கைகளை சுத்தம் செய்ய அறிவுறுத்தி் மாணவ-மாணவிகளை பள்ளிகளுக்கு உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
ஒவ்வொரு வகுப்பறைகளிலும் 25 மாணவ-மாணவிகள் அமருவதற்கு ஏதுவாக இடைவெளிகள் பின்பற்றப்பட்டு இருந்தன. ஒரு மேஜைக்கு 2 மாணவர்கள் வீதம் ஒரு அறையில் 25 மாணவர்களுக்கும் குறைவான அளவிலேயே அமர்ந்து இருந்தனர்.
மேலும் கொரோனா ஊரடங்கிற்கு பிறகு பள்ளிக்கு வந்துள்ள மாணவ- மாணவிகளை உற்சாகப்படுத்தும் வகையில் அவர்களுக்கு இனிப்பு (சாக்லெட், கமர்கட்) வழங்கியும் ஆசிரியர்கள் வரவேற்றனர்.
கலெக்டர் ஆய்வு
இதனிடையே மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை நேற்று காலை விழுப்புரம் அரசு மகளிர் மாதிரி மேல்நிலைப்பள்ளிக்கு நேரில் சென்று அரசின் அனைத்து வழிகாட்டு நெறிமுறைகளுடனும் மற்றும் பாதுகாப்பு அம்சங்களுடனும் பள்ளி இயங்குகிறதா? என்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது, மாணவ- மாணவிகள் எவரேனும் காய்ச்சல் மற்றும் இருமலுடன் பள்ளிக்கு வருகை புரிந்தால் உடனடியாக சம்பந்தப்பட்ட பெற்றோர்களுக்கும் மற்றும் அருகில் உள்ள சுகாதார மையத்திற்கும் தகவல் தெரிவிக்க வேண்டும். பள்ளியில் பணிபுரியும் சத்துணவு அமைப்பாளர், சமையலர்ஆகியோர் மாணவர்களுக்கு தேவையான உணவு, சுடுதண்ணீரை சுகாதார முறையில் முகக்கவசம் அணிந்து கொண்டு வந்து வழங்கவேண்டும். அனைத்து வகை உயர், மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களும் தமிழக அரசால் வெளியிடப்பட்ட நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். மாணவர்களை குழுவாக அமர்ந்து உணவு உண்ண அனுமதிக்க கூடாது. ஒருவருக்கொருவர் உணவுகளை பரிமாற்றம் செய்யக்கூடாது. மாணவர்கள் அனைவரும் மதிய உணவு உண்ணும்போதும், கழிவறைக்கு செல்லும்போதும், பள்ளி முடிந்து வீட்டிற்கு செல்லும்போது கூட்டமாக செல்ல அனுமதிக்கக்கூடாது, சமூக இடைவெளியை பின்பற்றி 25 மாணவர்கள் வீதமாக நேரம் இடைவெளிவிட்டு மாணவர்களை வீட்டிற்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று ஆசிரியர்களிடம் அவர் தெரிவித்தார்.
இந்த ஆய்வின்போது மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி கிருஷ்ணப்பிரியா, பள்ளி தலைமை ஆசிரியர் சசிகலா, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் லோகநாதன் ஆகியோர் உடனிருந்தனர்.
மீஞ்சூரை அடுத்த அத்திப்பட்டு புதுநகரில் அம்மா மினி கிளினிக் திறப்பு விழா நடைபெற்றது. விழாவுக்கு பொன்னேரி எம்.எல்.ஏ. சிறுணியம் பலராமன் தலைமை தாங்கினார்.