சொத்து பிரச்சினையில் பயங்கரம்: சுத்தியால் தாக்கி 4 வயது சிறுவன் படுகொலை பெரியப்பாவை போலீஸ் தேடுகிறது
பெலகாவி அருகே சொத்து பிரச்சினையில் சுத்தியலால் தாக்கி 4 வயது சிறுவன் படுகொலை செய்யப்பட்ட பயங்கரம் நடந்துள்ளது. தலைமறைவாகி விட்ட பெரியப்பாவை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.
பெலகாவி,
பெலகாவி மாவட்டம் சவதத்தி தாலுகா முருகோடு போலீஸ் எல்லைக்கு உட்பட்ட காரேகொப்பா கிராமத்தை சேர்ந்த தம்பதியின் மகன் மாருதி வீரப்பா சங்கண்ணவர் (வயது 4) . இந்த சிறுவனின் பெற்றோர் விவசாயம் செய்து வருகின்றனர். நேற்று காலையில் அவர்கள், சிறுவன் மாருதியை வீட்டில் விட்டுவிட்டு தோட்டத்திற்கு சென்றிருந்தனர். அப்போது வீட்டின் அருகே உள்ள கோவில் முன்பாக நின்று சிறுவன் மாருதி விளையாடிக் கொண்டிருந்தான்.
அந்த சந்தர்ப்பத்தில் அங்கு வந்த ஒரு மர்மநபர் தான் மறைத்து வைத்திருந்த சுத்தியலால், சிறுவனை கண்மூடித்தனமாக தாக்கினார். இதில், தலையில் பலத்தகாயம் அடைந்த சிறுவன் மாருதி ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்தான். பின்னர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பாிதாபமாக இறந்து விட்டான். உடனே அங்கிருந்து மர்மநபர் ஓடிவிட்டார். சிறுவன் படுகொலை செய்யப்பட்டு கிடப்பதை பார்த்து கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி முருகோடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீசார் விரைந்து வந்து சிறுவனின் உடலை கைப்பற்றி விசாரித்தனர். அப்போது சிறுவன் மாருதியை, அவனது பெரியப்பா ஈரப்பா சங்கண்ணவர் தான் சுத்தியலால் தாக்கி படுகொலை செய்தது தெரியவந்தது. மேலும் ஈசரப்பா சங்கண்ணவருக்கும், அவரது சகோதரருக்கும் இடையே சொத்து பிரச்சினை இருந்து வந்துள்ளது. இதன் காரணமாக ஆத்திரமடைந்த ஈரப்பா சங்கண்ணவர் தன்னுடைய சகோதரர் மகனை கொலை செய்தது தெரியவந்துள்ளது.
மாருதியின் உடலை பார்த்து, அவனது பெற்றோர் கதறி அழுத காட்சி பரிதாபமாக இருந்தது. இதுகுறித்து முருகோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தலைமறைவாகி விட்ட ஈரப்பா சங்கண்ணவரை வலைவீசி தேடிவருகிறார்கள். இந்த கொலை சம்பவம் முருகோடுவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story