அரியலூர் நர்சிங் மாணவி இறந்த சம்பவம்: சாவில் மர்மம் இருப்பதாக கூறி கல்லூரியை முற்றுகையிட்டு உறவினா்கள் போராட்டம்
சமயபுரத்தில் கல்லூரி மாடியில் இருந்து விழுந்த நர்சிங் மாணவி சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி நேற்று காலை அவரது உறவினர்கள் கல்லூரி வாயில் முன்பு முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது:-
நர்சிங் மாணவி
அரியலூர் மாவட்டம் பொய்யுரை சேர்ந்தவர் ராமு (என்கிற) ராமையன் விவசாயி. இவரது மகள் ராஜேஸ்வரி (வயது19). இவர் சமயபுரம் அருகே உள்ள ஒரு தனியார் மருத்துவக்கல்லூரியில், விடுதியில் தங்கி 2-ம் ஆண்டு நர்சிங் படித்து வந்தார். நேற்று முன்தினம் நடைபெற்ற தேர்வில் கலந்துகொண்டு தேர்வு எழுதுவதற்காக 3 நாட்களுக்கு முன்பு ஊரில் இருந்து கல்லூரிக்கு வந்திருந்தார்.
அன்று இரவு 12 மணிவரை மூன்றாவது மாடியில் மாணவிகள் தங்கும் விடுதியில் சக மாணவிகளுடன் அவர் கலகலப்பாக பேசிக்கொண்டிருந்தார.் தொடர்ந்து அனைவரும் தூங்க சென்று விட்டனர். இந்நிலையில் காலையில் சகமாணவிகள் எழுந்து பார்த்தபோது ராஜேஸ்வரி அறையில் இல்லை. உடனே மாடிக்கு சென்று பார்த்துள்ளனர்.
மாடியிலிருந்து விழுந்து சாவு
அப்போது அவர் பலத்த காயங்களுடன் மாடியிலிருந்து கீழே விழுந்து கிடந்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவிகள் மாடியில் இருந்து கீழே இறங்கி வந்தனர். பின்னர் அவரைமீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது பற்றிய தகவல் அறிந்த சமயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்பழகன் மற்றும் போலீசார் சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.
உறவினர்கள் முற்றுகை போராட்டம்
மேலும், போலீஸ் உயர் அதிகாரிகளும் நேரில் வந்து விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து உயிரிழந்த மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில், மாணவி சாவில்சந்தேகம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர்கள், உறவினர்கள் மற்றும் அந்த கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் என 200-க்கும் மேற்பட்டோர் நேற்று காலை அந்த கல்லூரி வாயில் முன்பு அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இது பற்றிய தகவல் அறிந்த மத்திய மண்டல ஐ.ஜி. ஜெயராமன், திருச்சி சரக டி.ஐ.ஜி. ஆனிவிஜயா, திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) செந்தில்குமார் உள்ளிட்ட போலீஸ் உயர் அதிகாரிகள் விரைந்து வந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து இறந்த மாணவியின் செல்போன் எண்ணில் யார், யார் பேசி இருக்கின்றார்கள்?.
மாணவி யாரிடம் கடைசியாக பேசினார்?, மூன்றாவது மாடியில் தங்கி இருந்த மாணவி 5-வது மாடிக்கு சென்றது ஏன்? என்பது உள்ளிட்ட தகவல்களை சேகரித்து, உண்மையைக் கண்டறிந்து சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதைத் தொடர்ந்து உறவினர்கள் முற்றுகை போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
பரபரப்பு
இதைத்தொடர்ந்து, மாணவி இறந்த சம்பவத்தை கொலை வழக்காக பதிவு செய்து லால்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு ராதாகிருஷ்ணன் விசாரணை நடத்தி உரிய அறிக்கை சமர்ப்பிக்கும்படி போலீஸ் ஐ.ஜி. ஜெயராமன் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து மாணவியின் உடல் பிரேத பரிசோதனைக்கு பின்னர் அவரது பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. தொடர்ந்து அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் சமயபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகர் தலைமையில் ஏராளமான போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story