பெரம்பலூர் தங்கும் விடுதியில் விஷம் குடித்த கள்ளக்காதலி சாவு; காதலனுக்கு சிகிச்சை


விஷம் குடித்ததில் உயிரிழந்த பூங்கொடி; மருத்துவமனையில் சிகிச்சை பெறும் மகேந்திரகுமார்
x
விஷம் குடித்ததில் உயிரிழந்த பூங்கொடி; மருத்துவமனையில் சிகிச்சை பெறும் மகேந்திரகுமார்
தினத்தந்தி 21 Jan 2021 2:30 AM GMT (Updated: 21 Jan 2021 2:30 AM GMT)

பெரம்பலூரில் உள்ள தங்கும் விடுதியில் விஷம் குடித்த கள்ளக்காதலி உயிரிழந்தார். காதலனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஓட்டலில் பழக்கம்
சென்னை கே.கே.நகர் பாரதிதாசன் காலனியை சேர்ந்தவர் மகேந்திரகுமார் (வயது 45). திருமணமான இவருக்கு மனைவி மற்றும் ஒரு மகன் உள்ளனர். சென்னையில் மரவேலை செய்து வருகிறார். திருச்சி மாவட்டம் எரக்குடி அருகே உள்ள கருப்பம்பட்டி கிராமத்தை சேர்ந்த செந்தில் மனைவி பூங்கொடி (35). இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர்.

பூங்கொடி கடந்த 7 ஆண்டுகளாக சென்னையில் உள்ள ஒரு ஓட்டலில் வேலை பார்த்து வந்தார். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக கடந்த 1½ மாதமாக கணவரை விட்டு பிரிந்து வாழ்ந்து வந்தார். சென்னை ஓட்டலில் அவர் வேலை பார்த்தபோது அந்த ஓட்டலுக்கு அடிக்கடி டீ சாப்பிட மகேந்திரகுமார் செல்வார். அப்போது அவருக்கும், பூங்கொடிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதனால், இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்துள்ளனர்.

விடுதியில் விஷம் குடித்தனர்
இந்தநிலையில் பொங்கல் பண்டிகை விடுமுறையில் இருந்த மகேந்திரகுமாரும், பூங்கொடியும் கடந்த 17-ந் தேதி இரவு பெரம்பலூர் வெங்கடேசபுரத்தில் உள்ள தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கினர். அப்போது அவர்கள் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். நேற்று காலை அவர்கள் தங்கியிருந்த அறைக்கு சென்ற ஓட்டல் ஊழியர், இருவரும் மயங்கி கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து பெரம்பலூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். அப்போது பூங்கொடி உயிரிழந்து விட்டது தெரியவந்தது. பின்னா் மகேந்திரகுமார் முகத்தில் போலீசார் தண்ணீரை தெளித்து எழுப்பி விசாரணை நடத்தினர்.

அப்போது அவர், நாங்கள் இருவரும் நேற்று முன்தினம் இரவே பூச்சி கொல்லி மருந்தை(விஷம்) குடித்து விட்டதாகவும், மேலும் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தார். பின்னர் அவரை சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பூங்கொடியின் உடல் பிரேத பரிசோதனைக்காக அதே மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

போலீசார் விசாரணை
இதுதொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தியதில் நேற்று அதிகாலை மகேந்திரகுமார் வெளியே சென்று தண்ணீர் பாட்டில் வாங்கி வந்தது தெரியவந்தது. அதன்பிறகு அறையில் அவர்களுக்குள் தகராறு எதுவும் ஏற்பட்டதா?, விஷம் கொடுத்து கள்ளக் காதலியை கொலை செய்துவிட்டு, தானும் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றாரா? அல்லது கள்ளக்காதலை இரு வீட்டாரின் குடும்பத்தாரும் கண்டித்ததால் இருவரும் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்தார்களா? என்பன போன்ற கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story