இறுதி பட்டியலில் புதுக்கோட்டை மாவட்டத்தில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 13 லட்சத்து 48 ஆயிரத்து 964; கலெக்டர் உமாமகேஸ்வரி தகவல்


புதுக்கோட்டை மாவட்ட இறுதி வாக்காளர் பட்டியலை கலெக்டர் உமாமகேஸ்வரி வெளியிட்ட போது
x
புதுக்கோட்டை மாவட்ட இறுதி வாக்காளர் பட்டியலை கலெக்டர் உமாமகேஸ்வரி வெளியிட்ட போது
தினத்தந்தி 21 Jan 2021 8:29 AM IST (Updated: 21 Jan 2021 8:29 AM IST)
t-max-icont-min-icon

புதுக்கோட்டை மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியலில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 13 லட்சத்து 48 ஆயிரத்து 964 ஆகும் என கலெக்டர் உமாமகேஸ்வரி தெரிவித்தார்.

புதிய வாக்காளர்கள்
புதுக்கோட்டை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்புமுறை சுருக்கத் திருத்தம்-2021-க்கான இறுதி வாக்காளர் பட்டியலை நேற்று கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் உமாமகேஸ்வரி வெளியிட்டார். அப்போது அவர் கூறியதாவது:-

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளில் 6 லட்சத்து 65 ஆயிரத்து 376 ஆண் வாக்காளர்களும், 6 லட்சத்து 83 ஆயிரத்து 516 பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தவர்கள் 72 பேரும் என மொத்தம் 13 லட்சத்து 48 ஆயிரத்து 964 வாக்காளர்கள் 2021-ம் ஆண்டிற்கான இறுதி வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு (2020) நவம்பர் மாதம் வரைவு வாக்காளர் பட்டியலில் மொத்தம் 13 லட்சத்து 10 ஆயிரத்து 68 வாக்காளர்கள் இடம் பெற்றிருந்தனர். அதன்பின்னர் கடந்த டிசம்பர் மாதம் 15-ந் தேதி வரை நடைபெற்ற 2021-ம் ஆண்டிற்கான சிறப்புமுறை சுருக்கத் திருத்தத்தின்போது 24 ஆயிரத்து 384 ஆண் வாக்காளர்கள், 28 ஆயிரத்து 728 பெண் வாக்காளர்கள் மற்றும் 12 மூன்றாம் பாலினத்தவர் சேர்த்து மொத்தம் 53 ஆயிரத்து 124 வாக்காளர்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

14,228 பேர் நீக்கம்
சிறப்புமுறை சுருக்கத் திருத்தத்தின் போது ஆண் வாக்காளர்கள் 7 ஆயிரத்து781 பேரும், பெண் வாக்காளர்கள் 6 ஆயிரத்து 443 பேரும், மூன்றாம் பாலினத்தவர்கள் 4 பேரும் சேர்த்து மொத்தம் 14 ஆயிரத்து 228 வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மொத்தம் 6,375 வாக்காளர்கள் முகவரி மாற்றம் செய்துள்ளனர். ஒரே தொகுதிக்குள் மொத்தம் 3,019 வாக்காளர்கள் இடம் மாற்றம் செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் 1,547 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. ஆயிரம் வாக்காளர்களுக்கு மேல் உள்ள வாக்குச்சாவடிகள் எண்ணிக்கையை பிரிக்க கூறப்பட்டுள்ளது. இதில் 461 வாக்குச்சாவடிகள் உள்ளன. மாவட்டத்தில் வாக்குச்சாவடிகளுக்கு தேவையான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் போதுமான அளவு உள்ளன. முதல் கட்டமாக சோதனை முடிவடைந்துள்ளது.

இளம்வாக்காளர்கள்
புதுக்கோட்டை மாவட்டத்தில் நகர எல்லைக்குள் 85 வாக்குச்சாவடி அமைவிடங்கள் மற்றும் கிராம எல்லைக்குள் 843 வாக்குச்சாவடி அமைவிடங்கள் என மொத்தம் 928 வரையறுக்கப்பட்ட வாக்குச்சாவடி அமைவிடங்கள் உள்ளன. இறுதி வாக்காளர் பட்டியலில் 18-19 வயதுடைய 33 ஆயிரத்து 200 இளம் வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சரவணன், வருவாய் கோட்டாட்சியர்கள் தண்டாயுதபாணி, டெய்சிகுமார், நகராட்சி ஆணையர் ஜீவா சுப்பிரமணியன் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி பிரமுகர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story