ஊரடங்குக்கு பின்னர் ஊட்டி தாவரவியல் பூங்காவில் சினிமா படப்பிடிப்பு; பாடல் காட்சிகள் எடுக்கப்பட்டன


ஊட்டி தாவரவியல் பூங்காவில் நடிகர் கவுதம் கார்த்திக் நடித்த காட்சி படமாக்கப்பட்டதை படத்தில் காணலாம்.
x
ஊட்டி தாவரவியல் பூங்காவில் நடிகர் கவுதம் கார்த்திக் நடித்த காட்சி படமாக்கப்பட்டதை படத்தில் காணலாம்.
தினத்தந்தி 21 Jan 2021 10:15 AM IST (Updated: 21 Jan 2021 10:15 AM IST)
t-max-icont-min-icon

ஊரடங்குக்கு பின்னர் ஊட்டி தாவரவியல் பூங்காவில் தமிழ் சினிமா படப்பிடிப்பு நடந்தது. பாடல் காட்சிகள் எடுக்கப்பட்டன.

சினிமா படப்பிடிப்பு
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் மலைப்பிரதேசமான நீலகிரி மாவட்டம் ஊட்டியில் சினிமா படப்பிடிப்புக்கு தடை விதிக்கப்பட்டது. ஊரடங்கு தளர்த்தப்பட்டதை தொடர்ந்து கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அனுமதி வழங்கப்பட்டது.

இந்த நிலையில் ஊரடங்குக்கு பின்னர் முதல் முறையாக நேற்று தமிழ் திரைப்பட படப்பிடிப்பு நடைபெற்றது. ஒரு நாள் படப்பிடிப்புக்கு ரூ.50 ஆயிரம் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. துள்ளாத மனமும் துள்ளும், மனம் கொத்தி பறவை உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் எழில், நடிகர் கவுதம் கார்த்திக், நடிகை சாய் பிரியா ஆகியோரை வைத்து புதிய திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

பாடல் காட்சிகள்
கவுதம் கார்த்திக் மோட்டார் சைக்கிளில் நடிகையை மோதுவது போல் வருவதும், அதற்கு நடிகை கோபமாக திட்டுவது போலவும் தாவரவியல் பூங்காவில் படமாக்கப்பட்டது. பின்னர் நடிகர் கவுதம் கார்த்திக் குழந்தைகளுடன் மோட்டார் சைக்கிளில் செல்வது மற்றும் நடிகையுடன் பாடல் காட்சிகள் எடுக்கப்பட்டன.

இந்த பூங்காவுக்கு வந்திருந்த வெளிமாநில, வெளிமாவட்ட சுற்றுலா பயணிகள் சினிமா படப்பிடிப்பு நடப்பதை கூடி நின்று பார்த்தனர். காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை படப்பிடிப்பு நடத்த அனுமதிக்கப் பட்டு இருந்தது.

போலீஸ் பாதுகாப்பு
இதுகுறித்து திரைப்பட இயக்குனர் எழில் கூறும்போது, ராஜேஷ்குமார் எழுதிய யுத்த சப்தம் என்ற நாவலை தழுவி புதிய திரைப்படத்தை இயக்கி வருகிறேன். இன்னும் படத்துக்கு பெயர் வைக்கவில்லை. 50 சதவீதம் படப்பிடிப்பு நிறைவடைந்து உள்ளது. நீலகிரியில் 5 நாட்கள் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டு உள்ளோம் என்றார். படப்பிடிப்பை ஒட்டி போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. அதேபோல் நடிகர் சூர்யா தயாரிப்பில் மற்றொரு திரைப்படம் ஊட்டியில் படமாக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Next Story