நீலகிரி மாவட்டத்தில் இயற்கை விவசாயம் மேற்கொள்ள 100 பேருக்கு ரூ.60 லட்சம் மானியம்; அதிகாரி தகவல்
நீலகிரி மாவட்டத்தில் இயற்கை விவசாயம் மேற்கொள்ள 100 பேருக்கு ரூ.60 லட்சம் மானியம் வழங்கப்பட்டு உள்ளது என்று அதிகாரி தெரிவித்தார்.
இது குறித்து நீலகிரி தோட்டக்கலைத்துறை இணை இயக்குனர் சிவசுப்பிரமணியம் கூறியதாவது:-
வேளாண்மை
நீலகிரி மாவட்டத்தை படிப்படியாக இயற்கை வேளாண்மை மாவட்டமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கலெக்டர் தலைமையில் அரசுத்துறை அலுவலர்கள், விவசாய சங்க உறுப்பினர்களை கொண்டு மாவட்ட அளவிலான வேளாண்மை உறுப்பினர்கள் குழு அமைக்கப்பட்டு உள்ளது.
நீலகிரியில் உள்ள பல்வேறு இடங்களில் இருந்து மண், நீர் மற்றும் விளைபொருட்களின் மாதிரிகள் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக விஞ்ஞானிகளால் சேகரிக்கப்பட்டு, அவற்றில் உள்ள ரசாயன மருந்தின் தன்மை குறித்த பகுப்பாய்வு சோதனை மேற்கொள்ளப்பட்டது.
100 பேருக்கு மானியம்
தொழில்நுட்ப விஞ்ஞானிகள் சமர்ப்பித்த அறிக்கையின் படி, அதிக நஞ்சு உள்ள பூச்சிக்கொல்லிகளின் உபயோகத்தை தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. 2019-2020-ம் ஆண்டு ஒருங்கிணைந்த தோட்டக் கலை வளர்ச்சி இயக்க திட்டத்தின் கீழ் 50 மண்புழு உர தொட்டிகள் அமைக்க விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்பட்டது.
இதன் மூலம் விவசாயிகள் தங்கள் நிலத்திலேயே இயற்கை உரம் தயாரிப்பதால், செயற்கை உரங்களுக்கு செலவிடும் முதலீடு கணிசமாக குறைக்கப்படுகிறது. தோட்டக்கலை சார்ந்த இயற்கை விவசாயம் மேற்கொள்ள 100 பேருக்கு ரூ.60 லட்சம் மானியம் வழங்கப்பட்டது.
நல்ல விலை கிடைக்கிறது
இதற்காக இயற்கை உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகள் விவசாயிகளுக்கு தடையின்றி கிடைப்பதற்காக டிரைக்கோடெர்மா விரிடி, மண்புழு உரம், பஞ்சகாவ்யா, தசகாவ்யா போன்றவை அரசு பண்ணைகளிலேயே தயாரிக்கப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
மாவட்ட நிர்வாகம் மற்றும் தோட்டக்கலை துறை மூலம் கடந்த 2 ஆண்டுகளில் எடுத்த முயற்சிகளால் நீலகிரியில் தற்போது 2, 370 எக்டர் பரப்பளவில் இயற்கை காய்கறி சாகுபடி தொடங்கப்பட்டு, இதன் மாறுதலுக்கான ஸ்கோப் சான்றிதழ் தமிழ்நாடு அங்கக சான்றளிப்பு துறை வழங்கியது. தேயிலை தோட்டங்களில் 2,865 எக்டர் பரப்பளவில் இயற்கை விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நீலகிரியை இயற்கை வேளாண் மாவட்டமாக மாற்றுவதோடு, அதன் மூலம் விவசாயிகள் நல்ல தரமான பொருட்களை உற்பத்தி செய்து, சந்தையில் நல்ல விலை கிடைக்கிறது. மேலும் அவர்களது வாழ்வாதாரம் மேம்பட்டு, வருங்கால சந்ததியினருக்கு ஆரோக்கியமான சுற்றுச்சூழலை உருவாக்கி கொடுக்க வழிவகுக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story