நாகை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட வயல்களில் அறுவடை தொடங்கியது


நாகை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட வயல்களில் அறுவடை தொடங்கியது
x
தினத்தந்தி 22 Jan 2021 3:17 AM IST (Updated: 22 Jan 2021 3:17 AM IST)
t-max-icont-min-icon

நாகை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட வயல்களில் அறுவடை தொடங்கி உள்ளது. இந்த ஆண்டு 3 போகம் நெல் சாகுபடி செய்தும் எதிர்பார்த்த மகசூல் இல்லை என விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர்.

நாகப்பட்டினம்,

பருவமழை பொய்த்து போனதாலும், மேட்டூர் அணையில் தண்ணீர் குறித்த நேரத்தில் திறக்கப்படாததாலும் முப்போக சாகுபடி என்பது நாகை மாவட்டத்தை பொறுத்தவரை கானல் நீராகவே இருந்து வந்தது. காவிரி டெல்டா மாவட்ட பாசனத்துக்காக கடந்த ஆண்டு (2020) ஜூன் மாதம் 12-ந் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. குறித்த நேரத்தில் அணை திறக்கப்பட்டதால் நாகை மாவட்டத்தில் குறுவை சாகுபடி நடந்தது.. இதை தொடர்ந்து சம்பா, தாளடி நெல் சாகுபடியும் தொடங்கியது.

விவசாயிகள் கண்ணீர்

இந்த நிலையில் கடந்த ஆண்டு இறுதியில் நிவர், புரெவி என அடுத்தடுத்து உருவான புயல் காரணமாக கனமழை பெய்ததால் நாகை மாவட்டத்தில் நெற்பயிர்கள் கடும் சேதத்தை சந்தித்தன. எப்போதும் இல்லாத வகையில் டிசம்பர் மாதம் இறுதியில் ஒரு வாரத்துக்கும் மேலாக கனமழை தொடர்ச்சியாக கொட்டித்தீர்த்ததால் நெல் வயல்கள் நிலை குலைந்து போயின. புயலில் தப்பிய பயிர்கள் கூட மழைநீரில் மூழ்கி அழுகி வீணாகி போனதாக விவசாயிகள் கண்ணீருடன் கூறுகிறார்கள்.

கைகளால் அறுவடை

நாகை மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில், வயலில் சாய்ந்த நெற்பயிர்கள் மீண்டும் முளைக்க தொடங்கின. இதனால் விவசாயிகளுக்கு கடும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

மழைக்கு பின்னர் வயல்களில் நெற்பயிர்கள் சாய்ந்து, சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது. இதன் காரணமாக எந்திரத்தை கொண்டு அறுவடை செய்ய முடியாத நிலையில் விவசாயிகள் உள்ளனர். நாகை அருகே உள்ள செல்லூர், பாலையூர், புலியூர், பெருங்கடம்பனூர், ஆழியூர் உள்ளிட்ட இடங்களில் விவசாயிகள் பழைய முறைப்படி கைகளால் அறுவடையை தொடங்கி உள்ளனர். ஈரமாக உள்ள நெற்கதிர்களை சாலையில் போட்டு உலர்த்தி, அதில் கிடைக்கும் நெல் மணிகளை தூற்றும் பணியும் நடந்து வருகிறது.

இதுகுறித்து கடைமடை விவசாயிகள் சங்க தலைவர் தமிழ்ச்செல்வன் கூறியதாவது:-

8 ஆண்டுகளுக்கு பிறகு...

8 ஆண்டுகளுக்கு பிறகு நாகை மாவட்டத்தில் குறுவை, சம்பா, தாளடி என முப்போகம் நெல் சாகுபடி செய்யப்பட்டது. அறுவடைக்கு தயாரான நிலையில் புயல் மற்றும் பருவம் தவறி பெய்த கன மழையால் பாதிப்பு ஏற்பட்டது. இன்னும் பல பகுதியில் வயல்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. வயலில் உள்ள ஈரப்பதம் காரணமாக எந்திரத்தை கொண்டு அறுவடை செய்ய முடியாது.

தண்ணீர் வடிந்த பிறகு அறுவடை செய்யலாம் என காத்திருந்தால், நெல்மணிகள் மீண்டும் வயலிலேயே முளைத்துவிடும். எனவே வேறு வழியில்லாமல் விவசாயிகள் கைகளால் அறுவடை செய்து வருகிறார்கள். அறுவடையான இடங்களில் 10 மூட்டை நெல் கிடைத்தால், அதில் 5 மூட்டை பதராக போய்விடுகிறது. 5 மூட்டை மட்டுமே மகசூல் மிஞ்சுகிறது.

நெல்லை கழிக்க வேண்டாம்

இந்த துயரமான நேரத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், காற்றாடியை கொண்டு நெல்லை தூற்றக்கூடாது. ஈரப்பதத்தை காரணம் காட்டி, விவசாயிகள் கஷ்டப்பட்டு கொண்டுவந்த நெல்லை கழிக்க வேண்டாம். ஈரப்பதம் இருந்தால் நெல்லை கொள்முதல் செய்து விவசாயிகளுக்கு அரசு உதவ வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.நாகை மாவட்டத்தில் எந்த ஆண்டும் இல்லாத வகையில் இந்த ஆண்டு 3 போகம் நெல் சாகுபடி செய்தபோதும், மகசூல் எதிர்பார்த்த அளவு இல்லை என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

Next Story