சட்டவிரோத கட்டிடத்தை இடிக்க தடை கோரிய நடிகர் சோனு சூட் மனு தள்ளுபடி ஐகோர்ட்டு உத்தரவு
சட்டவிரோத கட்டத்தை இடிக்க தடை கோரிய நடிகர் சோனு சூட் மனுவை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.
மும்பை,
சிம்பு நடித்த ஒஸ்தி, அனுஷ்கா நடித்த அருந்ததி உள்பட ஏராளமான தமிழ் படங்களில் வில்லனாக நடித்தவர் பிரபல இந்தி நடிகர் சோனு சூட்.
இவர் கொரோனா காலத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்தது உள்ளிட்ட உதவியை செய்து திரையில் வில்லனாகவும், நிஜத்தில் நாயகனாகவும் ஜொலித்து மக்களின் மனதில் இடம் பிடித்தார்.
இந்தநிலையில் மும்பை ஜூகுவில் உள்ள தனது 6 மாடி கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தை அனுமதி பெறாமல் ஓட்டலாக மாற்றியதால் பிரச்சினையில் மாட்டியுள்ளார்.
குடியிருப்பு கட்டிடத்தை ஓட்டலாக மாற்றியது தொடர்பாக சோனு சூட்டுக்கு மும்பை மாநகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியது. இதை எதிர்த்து அவர் மும்பை சிவில் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து இருந்தார். ஆனால் கோர்ட்டு அவரது மனுவை தள்ளுபடி செய்தது.
இந்தநிலையில் ஜூகு போலீசில் மாநகராட்சியினர் புகார் ஒன்றை அளித்தனர். அந்த புகாரில், சோனு சூட் உரிய அனுமதி பெறாமல் குடியிருப்பு கட்டிடத்தை ஓட்டலாக மாற்றியிருப்பதாக கூறப்பட்டு இருந்தது.
இதற்கிடையே நடிகர் சோனு சூட் மும்பை மாநகராட்சி அனுப்பிய நோட்டீசை ரத்து செய்ய கோரியும், மாநகராட்சி இடிப்பு நடவடிக்கையை எடுக்காமல் இருக்க இடைக்கால தடைவிதிக்க வேண்டும் எனவும் மும்பை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தார்.
இந்த மனு நேற்று ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி நடிகர் சோனுசூட் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
மேலும் நீதிபதி கூறுகையில், “உங்களுக்கு (சோனு சூட்) ஏராளமான வாய்ப்புகள் கிடைத்தன. ஆனால் நீங்கள் மிகவும் தாமதப்படுத்திவிட்டீர்கள். விடா முயற்சி உள்ளவர்களுக்கு மட்டுமே சட்டம் உதவி செய்யும். பந்து தற்போது மும்பை மாநகராட்சியிடம் உள்ளது. நீங்கள் அவர்களை அணுகலாம். அடுத்து என்ன செய்யவேண்டும் என்று அவர்கள் முடிவெடுப்பார்கள்" என்றார்.
மும்பை ஐகோர்ட்டின் உத்தரவால் சோனு சூட்டுக்கு சொந்தமான கட்டிடம் இடிக்கப்படுமா என்ற பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story