தஞ்சையில் சாலை பாதுகாப்பு விழாவையொட்டி பெண்கள் தலைகவசம் அணிந்து இருசக்கர வாகன ஊர்வலம்


தஞ்சையில் சாலை பாதுகாப்பு விழாவையொட்டி பெண்கள் தலைகவசம் அணிந்து இருசக்கர வாகன ஊர்வலம்
x
தினத்தந்தி 21 Jan 2021 10:34 PM GMT (Updated: 21 Jan 2021 10:34 PM GMT)

தஞ்சையில் சாலை பாதுகாப்பு விழாவையொட்டி பெண்கள் தலைகவசம் அணிந்து இருசக்கர வாகனத்தில் ஊர்வலமாக சென்றனர்.

தஞ்சாவூர்,

32-வது சாலை பாதுகாப்பு மாதம் கடந்த 18-ந்தேதி முதல் அடுத்தமாதம் (பிப்ரவரி) 17-ந்தேதி வரை கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி நேற்று தஞ்சை, கும்பகோணம் வட்டார போக்குவரத்து அலுவலகம் மற்றும் போக்குவரத்து போலீஸ் சார்பில் 4-வது நாளான நேற்று இருசக்கர வாகன விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தப்பட்டது.

தஞ்சை மேம்பாலம் அருகே உள்ள போலீஸ் மைதானத்தில் இருந்து ஊர்வலம் தொடங்கியது. ஊர்வலத்திற்கு வட்டார போக்குவரத்து அதிகாரி ஜெய்சங்கர் தலைமை தாங்கினார். நகர துணை போலீஸ் சூப்பிரண்டு பாரதிராஜன் முன்னிலை வகித்தார். இருசக்கர வாகன ஊர்வலத்தை துணை போக்குவரத்து ஆணையர் உதயகுமார், தஞ்சை மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

பெண்கள் தலைகவசம்

இந்த இருசக்கர வாகன ஊர்வலத்தில் பெண் போலீசார், ஓட்டுனர் பயிற்சி பள்ளியை சேர்ந்த பெண் பணியாளர்கள், அம்மா இருசக்கர வாகனம் பெற்ற பெண்கள் என 100-க்கும் மேற்பட்டவர்கள் தலைகவசம் அணிந்து கலந்து கொண்டனர். ஊர்வலம் பெரியகோவில், சோழன்சிலை, ராசாமிராசுதார் மருத்துவமனை சாலை, அண்ணாசிலை, காந்திஜிசாலை, ஆற்றுப்பாலம் வழியாக ரெயில் நிலையத்தை அடைந்தது.

அப்போது சாலை பாதுகாப்பின் அவசியம் குறித்தும், தலைகவசம் அணிந்து இருசக்கர வாகனம் ஓட்டுவது குறித்த துண்டுபிரசுரங்களும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன.

இதில் மோட்டார்வாகன ஆய்வாளர்கள் விஜயகுமார், குண்டுமணி, அனிதா, விஸ்வநாதன், போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம், அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரா மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள், மகளிர் திட்ட அதிகாரிகள், போலீசார் கலந்து கொண்டனர்.

Next Story