அம்பத்தூர் அருகே வீட்டில் துப்பாக்கியால் சுட்டு பயிற்சி எடுத்த வாலிபரால் பரபரப்பு
அம்பத்தூர் அருகே, வீட்டில் துப்பாக்கியால் சுட்டு பயிற்சி எடுத்த வாலிபரை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
துப்பாக்கி சுடும் சத்தம்
சென்னை அம்பத்தூரை அடுத்த அத்திப்பட்டு, திருப்பதி கொடை ரோடு பகுதியை சேர்ந்தவர் தமிழ்செல்வம்(வயது 23). பட்டதாரியான இவர், தற்போது வீட்டில் இருந்தபடி நாய் குட்டிகளை விற்பனை செய்து வருகிறார்.
இவரது வீட்டில் இருந்து அடிக்கடி துப்பாக்கியால் சுடும் சத்தம்கேட்டு வந்தது. நேற்றும் வழக்கம்போல் தமிழ்செல்வம் வீட்டில் துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் இதுபற்றி அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
பொம்மை துப்பாக்கிகள்
அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சோதனை நடத்தினர். அதில் தமிழ்செல்வம், தனது வீட்டில் ஏசியன் ஏர்கன், ஏர்பிஸ்டல் மற்றும் ஏர்கன் ரகத்தை சேர்ந்த 3 துப்பாக்கிகளை வைத்து தினமும் பயிற்சியில் ஈடுபட்டு வந்தது தெரிந்தது. இந்த துப்பாக்கிகளை கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அவர் வாங்கியதும் தெரிந்தது.
3 துப்பாக்கிகளையும் பறிமுதல் செய்த போலீசார், நிபுணர் குழுவை வைத்து ஆய்வு செய்தனர். அதில் அவை ஒரிஜனல் போன்று தோன்றினாலும் 3-ம் பொம்மை துப்பாக்கிகள்தான் என்பதும், இவற்றில் குண்டுகள் போட்டு சுட முடியாது என்பதும் தெரிந்தது.
எச்சரித்து அனுப்பினர்
இவை கடற்கரையில் பலூன் சுட சிறுவர்கள் பயன்படுத்தும் விளையாட்டு துப்பாக்கி வகையைச் சேர்ந்தது என்பதும் தெரிந்தது. ஆனால் அவற்றை எங்கிருந்து?. எதற்காக தமிழ்செல்வம் வாங்கினார்?
அதன்மூலம் எதற்காக வீட்டில் இருந்தபடி பயிற்சி எடுத்தார்? என்பது குறித்து அவரிடம் போலீசார் விசாரித்தனர். பின்னர் அவரை எச்சரித்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story