குடும்பத்தகராறில் மகள் கண் எதிரே பயங்கரம்; இரும்பு குழாயால் அடித்து 2-வது மனைவி கொலை; இறைச்சி வியாபாரி கைது


கொலையான சரிதாவுடன் மதன்.
x
கொலையான சரிதாவுடன் மதன்.
தினத்தந்தி 22 Jan 2021 4:32 AM IST (Updated: 22 Jan 2021 4:32 AM IST)
t-max-icont-min-icon

குடும்பத் தகராறில் மகள் கண் எதிரேயே இரும்பு குழாயால் அடித்து 2-வது மனைவியை கொலை செய்த இறைச்சி வியாபாரியை போலீசார் கைது செய்தனர்.

கள்ளத்தொடர்பு
ஆவடியை அடுத்த மேல்பாக்கம் பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் மதன் (வயது42). இவர், வீட்டின் அருகிலேயே இறைச்சி கடை வைத்து உள்ளார். இவருடைய முதல் மனைவி அலமேலு (38). இவர்களுக்கு சங்கீதா (15) என்ற மகளும், யாபேஸ் (13) என்ற மகனும் உள்ளனர்.

இதற்கிடையில் மதனுக்கு சரிதா (35) என்ற வேறு ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. சரிதாவுக்கு சுரேஷ் என்பவருடன் ஏற்கனவே திருமணமாகி விட்டது. இவர்களுக்கு சாலினி (8) என்ற மகள் உள்ளார். மதனுடன், சரிதாவுக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டதால் சுரேஷ், சரிதாவை விட்டு பிரிந்து தனியாக சென்றுவிட்டார்.

அதேபோல் மதனின் முதல் மனைவியான அலமேலுவும் கணவரை விட்டு பிரிந்து தனது 2 பிள்ளைகளுடன் திருவேற்காடு அடுத்த காட்டுப்பாக்கம் பகுதியில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் கடந்த 4 ஆண்டுகளாக வசித்து வருகிறார்.

2-வது திருமணம்
இதையடுத்து 2 ஆண்டுகளுக்கு முன்பு சரிதாவை மதன் 2-வது திருமணம் செய்து கொண்டார். மதனுக்கும், சரிதாவுக்கும் மேக்டலின் என்ற 7 மாத பெண் குழந்தை பிறந்தது. சரிதா, சாலினி மற்றும் 7 மாத பெண் குழந்தை மேக்டலின் ஆகியோருடன் மதன் தனியாக குடும்பம் நடத்தி வந்தார்.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு முதல் மனைவியின் மகள் சங்கீதா, மதனுக்கு போன் செய்து செலவுக்கு பணம் கேட்டதாக தெரிகிறது. இதனால் மதனுக்கும், சரிதாவுக்கும் தகராறு ஏற்பட்டது.

இரும்பு குழாயால் அடித்துக்கொலை
நேற்று மதியம் இதுதொடர்பாக இருவருக்கும் மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது சரிதா, மதனை கையால் அடித்ததாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் பயங்கர தகராறு ஏற்பட்டது.

இதில் ஆத்திரம் அடைந்த மதன், வீட்டில் இருந்த இரும்பு குழாயால் சரிதாவின் தலையில் சரமாரியாக தாக்கினார். இதில் மண்டை உடைந்ததில் ரத்த வெள்ளத்தில் அதே இடத்தில் சரிதா பரிதாபமாக இறந்தார்.

இதையெல்லாம் நேரில் பார்த்துக் கொண்டிருந்த சரிதாவின் மகள் சாலினி, தனது கண் எதிரேயே தாய் அடித்துக்கொலை செய்யப்பட்டதை கண்டு அதிர்ச்சியில் வீட்டில் இருந்து அலறி அடித்துக் கொண்டு வெளியே ஓடினார். இதற்கிடையில் 7 மாத குழந்தையை தூக்கிக்கொண்டு மதன் தலைமறைவானார்.

கணவர் கைது
இதுபற்றி தகவல் அறிந்துவந்த ஆவடி போலீசார் கொலையான சரிதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து 7 மாத பெண் குழந்தையுடன் கொரட்டூர் பகுதியில் பதுங்கி இருந்த மதனை நேற்று மாலை கைது செய்தனர். மேலும் அவரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. குடும்பத் தகராறில் மனைவியை கொன்றதாக கணவர் கைதானதால் தாய்-தந்தை இன்றி சரிதாவின் 7 மாத குழந்தை உள்பட 2 மகள்களும் அனாதையாக பரிதவித்த காட்சி பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story