கங்கை கொண்ட சோழபுரம் பகுதியில் அகழ்வாராய்ச்சிக்கான ஆய்வு பணி இன்று தொடக்கம்; அதிகாாி தகவல்
கங்கை கொண்ட சோழபுரத்தில் அகழ்வாராய்ச்சிக்கான ஆய்வு பணி இன்று(வெள்ளிக்கிழமை) முதல் தொடங்குகிறது என்று அதிகாரி கூறினார்.
மீன்சுருட்டி,
கீழடி, ஆதிச்சநல்லூர், சிவகளை மற்றும் கொடுமலையை தொடர்ந்து தற்போது 3 பகுதிகளில் அகழ்வாராய்ச்சி பணி தொடங்கப்பட உள்ளது. இதில் அரியலூர் மாவட்டத்தில் உள்ள கங்கை கொண்ட சோழபுரம் பகுதியையும் தமிழக அரசு அறிவித்துள்ளது. கங்கைகொண்ட சோழபுரம் சோழப்பேரரசின் தலைநகராக விளங்கிய பகுதியாகும். இந்த நகரை உருவாக்கிய ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட பிரகதீஸ்வரர் கோவில் உலகப் புகழ்பெற்ற சுற்றுலா தலமாகவும் சோழர்களின் கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாகவும் விளங்குகிறது. மேலும் யுனெஸ்கோவால் பிரதான சின்னமாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இப்பகுதியில் பல்வேறு காலகட்டங்களில் அகழ்வாராய்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ராஜேந்திர சோழன் அரண்மனை இருந்த மாளிகைமேட்டில் அகழ்வாராய்ச்சி செய்ததில் கூரை ஓடுகள், இரும்பு ஆணிகள், யானை தந்தங்கள் மற்றும் தந்தங்களாலான பொருட்கள், சீன நாட்டு பானை ஓடுகள், மண்பாண்ட ஓடுகள் உள்ளிட்ட பல்வேறு வகையான அரிய பொருட்கள் கிடைத்துள்ளன. மேலும் மாளிகைமேடு அரண்மனை அமைந்துள்ள பகுதியில் 1980, 81, 85, 87, 91 மற்றும் 2009 ஆகிய ஆண்டுகளில் பல கட்டமாக அகழ்வாராய்ச்சி பணி மேலோட்டமாக நடைபெற்றது. அப்போது 31 குழிகள் தோண்டப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது.
தற்போது அகழ்வாராய்ச்சியை தீவிரப்படுத்தும் பணியை தொடங்கி உள்ளனர். இதையொட்டி கங்கைகொண்ட சோழபுரத்தை சுற்றியுள்ள மாளிகைமேடு, குருவாலப்பர்கோவில், பொன்னேரி, ஆயுதகளம் உள்ளிட்ட 6 இடங்களில் அகழ்வாராய்ச்சி செய்வதற்கான முன்னேற்பாடுகள் குறித்து தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை துணை இயக்குனர் சிவானந்தம் ஆய்வு செய்தார். பின்னர் அவர், நிருபா்களிடம் கூறியதாவது;-
ராஜேந்திர சோழன் மற்றும் அவருக்கு பின்னால் வந்த சோழ மன்னர்கள் ஆட்சி செய்த இப்பகுதி இந்த ஆண்டு அகழ்வாராய்சி செய்வதற்கான பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ளது. ஏற்கனவே நடைபெற்ற அகழ்வாராய்ச்சிகள் சிறிய அளவில் நடைபெற்றபோதும், பல்வேறு வகையான அரிய பொருட்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. எனவே இம்முறை அகல்வாராய்ச்சி முழுமையான அளவில் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கான பணிகள் நாளை(இன்று) முதல் தொடங்குகிறது. முதல்கட்டமாக ஆளில்லா விமானத்தின் மூலம் அறிவியல் முறைப்படி ஆய்வு செய்து அகழ்வாராய்சி செய்ய தகுதியான இடங்கள் குறித்து அண்ணாமலை பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் திருவாரூர் மத்திய பல்கலைக்கழக பேராசிரியர்கள் நாளை(இன்று) முதல் ஆய்வு பணிகளில் ஈடுபடுவார்கள்.
அடுத்த மாதம் தொடக்கம்
இதையடுத்து பூமியை ஊடுருவி ஆய்வு செய்யும் பணியும் நடைபெறும். இதில் பூமிக்கு அடியில் உள்ள பொருட்கள் மற்றும் கனிமங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு, அகழ்வாராய்ச்சிக்கு தகுதியான இடங்கள் கண்டறியப்படும். அந்த இடங்களில் முழுமையான அளவிற்கு அகழ்வாராய்ச்சி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். அந்த 6 இடங்களிலும் அடுத்த மாதம்(பிப்ரவரி) இரண்டாம் வாரம் அகல்வாராய்ச்சி பணி தொடங்க உள்ளது, என்று தெரிவித்தார். ஆய்வின்போது உடையார்பாளையம் கோட்டாட்சியர் பூங்கோதை, ஜெயங்கொண்டம் தாசில்தார் கலைவாணன், தொல்லியல்துறை அலுவலர் பிரபாகரன், பொறியாளர் கோமகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story