தேனி மாவட்ட கலெக்டருக்கு கொரோனா; அரசு மருத்துவமனையில் அனுமதி
தேனி மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
கலெக்டருக்கு கொரோனா
தேனி மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ். இவர் கடந்த சில நாட்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். காய்ச்சல் பாதிப்பு எதிரொலியாக அவர் தனது முகாம் அலுவலகத்தில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு நேற்று முன்தினம் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
நேற்று பரிசோதனை முடிவு வந்தது. இதில் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அங்கு கொரோனா சிறப்பு வார்டில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
உடல் நிலை
கலெக்டரின் உடல்நிலை நல்ல நிலையில் இருப்பதாகவும், சில நாட்கள் சிகிச்சை பெற்று கொரோனா தொற்றில் இருந்து மீண்டுவிடுவார் என்றும் மருத்துவ குழுவினர் தெரிவித்தனர். கலெக்டருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து முகாம் அலுவலகத்தில் பணியாற்றிய நபர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவர்களும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.
கலெக்டர் கடந்த 15-ந்தேதி கர்னல் ஜான் பென்னிகுவிக் பிறந்த நாளையொட்டி லோயர்கேம்ப்பில் நடந்த அரசு விழா மற்றும் பாலார்பட்டியில் நடந்த பொங்கல் விழாக்களில் பங்கேற்றார். கடந்த 16-ந்தேதி வைகை அணையில் இருந்து 58-ம் கால்வாயில் தண்ணீர் திறக்கும் நிகழ்ச்சியிலும் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சிகளில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அரசு அதிகாரிகளும் பங்கேற்றனர். மேலும் கடந்த 18-ந்தேதி கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை கலெக்டர் வாங்கினார். அதன்பிறகு அரசு விழாக்களிலோ, அரசு அலுவலகங்களில் நடந்த கூட்டங்களிலோ கலெக்டர் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story