கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் தொடர் மழை: அறுவடைக்கு தயாரான திராட்சை பழங்கள் அழுகின; கிலோ ரூ.10-க்கு வாங்க ஆளில்லை
கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் பெய்த தொடர் மழைக்கு அறுவடைக்கு தயாராக இருந்த திராட்சை பழங்கள் அழுகின. இதனால் கிலோ ரூ.10-க்கு வாங்க ஆளில்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
திராட்சை சாகுபடி
கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் நெல், வாழை, தென்னை உள்ளிட்ட விவசாயங்களுக்கு அடுத்தபடியாக கருப்பு பன்னீர் திராட்சை விவசாயம் செய்ய விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். திராட்சை விவசாயம் செய்ய ஏற்ற மண் வளமும், அதே நேரத்தில் மிதமான தட்பவெப்ப நிலையும் இருப்பதால் காமயகவுண்டன்பட்டி, சுருளிப்பட்டி, நாராயணதேவன்பட்டி, ராயப்பன்பட்டி, ஆனைமலையன்பட்டி புதுப்பட்டி, உத்தமபாளையம் ஆகிய ஊர்களில் சுமார் 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் திராட்சை விவசாயம் நடைபெற்று வருகிறது.
தமிழ்நாட்டிலேயே ஆண்டுதோறும் திராட்சை பழம் விளையும் இடமாக கம்பம் பள்ளத்தாக்கு பகுதி விளங்குகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் பெய்த தொடர்மழை காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த திராட்சை பழங்கள் கொடியிலே வெடித்து அழுகின. இதனால் திராட்சை பழங்களை கொள்முதல் செய்ய வியாபாரிகள் ஆர்வம் காட்டவில்லை. குறைந்த விலைக்கு பழத்தை வாங்கிக் கொள்ளுங்கள் என்று விவசாயிகள் வியாபாரிகளிடம் வலியுறுத்தி வந்தனர். ஆனாலும் திராட்சை பழங்களை வாங்குவதற்கு வியாபாரிகள் வரவில்லை.
விவசாயிகள் விரக்தி
இதனால் நல்ல நிலையில் உள்ள திராட்சை பழம் ஒரு கிலோ ரூ.30-க்கு விற்பனை செய்யப்பட்டது. மழையால் சேதமடைந்த திராட்சை பழங்களை ஒரு கிலோ ரூ.10-க்கு கூட வாங்குவதற்கு வியாபாரிகள் வரவில்லை. இதனால் நல்ல நிலையில் உள்ள பழங்கள் விற்பனை செய்ய முடியாமல் போனது. இதில் விரக்தியடைந்த சுருளிப்பட்டி யானைகஜம் பகுதியில் உள்ள விவசாயிகள் தோட்டத்தில் காய்த்து இருந்த திராட்சை பழங்களை வெட்டி கீழே வீசினர்.
இதுகுறித்து விவசாயிகளிடம் கேட்டபோது, அவர்கள் கூறியதாவது:-
திராட்சை பழங்கள் நன்கு விளைந்து அறுவடைக்கு தயாராக இருந்தது. தொடர் மழை காரணமாக திராட்சை பழங்களில் வெடிப்பு ஏற்பட்டு பழங்கள் அழுகியது. சேதமடைந்த பழங்களை தவிர்த்து மற்ற பழங்களை வாங்கிக்கொள்ளுங்கள் என்று கூறியும் வியாபாரிகள் வரவில்லை. இதனால் சுமார் 7 டன் பழங்களை வெட்டி கீழே போட்டுள்ளோம். இதனால் பல லட்சம் ரூபாய் வருவாய் இழந்துள்ளோம். பறிக்கப்பட்ட திராட்சை பழங்களை பாதுகாக்க குளிர்பதன கிட்டங்கி அமைக்க வேண்டும் என்று பலமுறை அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளோம். ஆனால் இதுவரை நடவடிக்கை இல்லை. குளிர்பதன கிட்டங்கி அமைக்கப்பட்டால் உரிய நேரத்தில் திராட்சை பழங்களை பாதுகாத்து நல்ல விலைக்கு விற்பனை செய்ய ஏதுவாக இருக்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story