மு.க.ஸ்டாலின் பங்கேற்ற மக்கள் கிராமசபை கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு கொலை மிரட்டல் விடுத்த பெண் மீது வழக்கு
தேனி அருகே மு.க.ஸ்டாலின் பங்கேற்ற மக்கள் கிராமசபை கூட்டத்தில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு கொலை மிரட்டல் விடுத்த பெண் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
பெண் சர்ச்சை பேச்சு
தேனி அருகே அரண்மனைப்புதூரில் தி.மு.க. சார்பில் மக்கள் கிராமசபை கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. கூட்டத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பேசினார். கூட்டத்தில் பெண்கள் சிலரும் தங்களின் கருத்துகளை தெரிவித்தனர்.
இந்த கூட்டத்தில் பூதிப்புரத்தை சேர்ந்த லட்சுமி என்ற பெண் பேசும் போது, எங்கள் ஊரில் சாலை மோசமாக உள்ளதாகவும், ஓ.பன்னீர்செல்வம் வருகைக்காக சாலை ஒட்டுப்போடப்பட்ட நிலையில், அந்த சாலையும் சேதம் அடைந்து விட்டதாகவும் தெரிவித்தார். மேலும் அந்த பெண் ஓ.பன்னீர்செல்வத்துக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் பேசினார். இதைக்கேட்ட மு.க.ஸ்டாலின், அந்த பெண்ணை கண்டித்ததுடன், அவர் கூறிய வார்த்தைகளை வாபஸ் பெறுமாறு கேட்டார். இதையடுத்து அந்த பெண்ணும் வாபஸ் பெற்றார்.
வழக்குப்பதிவு
இந்த நிலையில் அந்த பெண் பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியது. இதுஅ.தி.மு.க.வினரிடையே சர்ச்சையை ஏற்படுத்தியது. கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் பேசிய அந்த பெண் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பழனிசெட்டிபட்டி போலீஸ் நிலையத்தில் பூதிப்புரம் பேரூர் அ.தி.மு.க. செயலாளர் ரவி, அன்னஞ்சியை சேர்ந்த அ.தி.மு.க. வக்கீல் வேல்முருகன் ஆகியோர் தனித்தனியாக நேற்று புகார் செய்தனர். இதே போன்று போடி தாலுகா போலீஸ் நிலையத்திலும் அந்த பெண் மீது புகார் அளிக்கப்பட்டது.
இதையடுத்து லட்சுமி மீது பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அவர் மீது இந்திய தண்டனை சட்ட பிரிவு 506 பகுதி 2 (கொலை மிரட்டல்), 153 சட்ட பிரிவு (கலகம் விளைவிக்கும் உள்நோக்கத்துடன் வேண்டுமென்றே ஆத்திரமூட்டுதல்), 504 சட்ட பிரிவு (கலகம் விளைவித்தல்) ஆகிய 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். தலைமறைவாக உள்ள அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story