ராமநாதபுரம் மாவட்டத்தில் கனிமொழி எம்.பி. 2 நாட்கள் தீவிர பிரசாரம்


ராமநாதபுரம் மாவட்டத்தில் கனிமொழி எம்.பி. 2 நாட்கள் தீவிர பிரசாரம்
x

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளிலும் தி.மு.க. மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி. 2 நாட்கள் தீவிர தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார்.

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்டத்தில் விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் என்ற தி.மு.க. தேர்தல் பிரசார நிகழ்ச்சி ராமநாதபுரம், பரமக்குடி, முதுகுளத்தூர், திருவாடானை ஆகிய 4 தொகுதிகளில் நடைபெறுகிறது. இன்றும், நாளையும் தி.மு.க. மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி. தீவிர சுற்றுப்பயணம் செய்து தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார். இந்த தேர்தல் பிரசாரத்திற்கு வருகை தரும் கனிமொழி எம்.பிக்கு மாவட்ட எல்லையான கன்னிராஜபுரத்தில் தி.மு.க. சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது.

முதல் நாளில் சாயல்குடி வர்த்தகர்களுடன் சந்திப்பு மற்றும் நடைபயணம் செல்கிறார். அதனைத் தொடர்ந்து வாலிநோக்கம் உப்பள தொழிலாளர்களுடன் சந்திப்பு நிகழ்ச்சியும், கடலாடி பகுதியில் வேன் பிரசாரமும் மேற்கொள்கிறார். இன்று பிற்பகல் 3 மணிக்கு முதுகுளத்தூர் மாங்குடி மதியழகன் குடும்பத்தினரை சந்திப்பதுடன், முதுகுளத்தூரில் வேனில் இருந்தவாறு தேர்தல் பிரசாரம் செய்கிறார். பின்னர் 3.45 மணிக்கு பாம்பூர் சமத்துவபுரத்தில் பிரசாரம் செய்கிறார்.

இதனை தொடர்ந்து பரமக்குடி செல்லும் கனிமொழிஎம்.பி. அங்கு நெசவாளர்கள் கூட்டமைப்பினரை சந்தித்து உரையாடுகிறார். அதன்பின்னர் பரமக்குடி தொகுதி பூத் கமிட்டி நிர்வாகிகளுடன் கட்சி மற்றும் தேர்தல் தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடத்துகிறார். பின்னர் மின்சாரம் தாக்கி பலியான உரப்புளி பகுதியை சேர்ந்த தி.மு.க. பிரமுகர் ராஜேஷ்குமாரின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறி அதன்பின்னர் மஞ்சூரில் செங்கல் சூளை பணியாளர்களை சந்தித்து குறைகளை கேட்டறிகிறார். அதனை தொடர்ந்து இரவில் சத்திரக்குடியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார்.

இதன் தொடர்ச்சியாக நாளை (23-ந் தேதி) ராமேசுவரம் செல்லும் கனிமொழி எம்.பி, முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் இல்லத்திற்கு சென்று அவரது குடும்பத்தினருடன் கலந்துரையாடுகிறார். அதனைத் தொடர்ந்து ராமேசுவரம் யாத்திரை பணியாளர்களுடன் உரையாடி குறைகளை கேட்டறியும் அவர் தங்கச்சிமடம் நாட்டுப்படகு மீனவர்கள், பாம்பன் கடல்பாசி சங்கு உற்பத்தியாளர்களையும் நேரில் சந்தித்து பேசுகிறார்.

பின்னர் நண்பகல் 12 மணியளவில் ராமநாதபுரம் அருகே தாமரைக்குளம் கிராமத்தில் நடைபெறும் மக்கள் கிராமசபை கூட்டத்தில் பங்கேற்று உரையாடும் அவர் நாளை பிற்பகல் 3 மணிக்கு ராமநாதபுரம் வந்து மகளிர் சுய உதவி குழுக்களை சந்திக்கிறார். அதன் தொடர்ச்சியாக ராமநாதபுரம் அரண்மனை முன்பு வேனில் இருந்தவாறு தேர்தல் பிரசாரம் செய்யும் அவர் அரண்மனை மார்க்கெட் பகுதிகளில் நடந்தவாறு மக்களை சந்திக்கிறார்.

இதன் பின்னர் மாலை 4 மணி அளவில் ராமநாதபுரம் கிங் பேலஸ் மகாலில் சட்டமன்ற தொகுதி பூத் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். அதன் தொடர்ச்சியாக தேவிபட்டினம் சென்று மாலை 5 மணிக்கு வேன் மூலம் பிரசாரம் செய்கிறார். இரவு 7.30 மணிக்கு திருவாடானையில் வேன் மூலம் பிரசாரம் செய்யும் கனிமொழி எம்.பி. தனது தேர்தல் பிரசாரத்தை இம்மாவட்டத்தில் முடித்து கொள்கிறார். கனிமொழி எம்.பி.க்கு சிறப்பான வரவேற்பு அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் தெரிவித்துள்ளார்.

Next Story