தமிழகத்தில் வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளை பா.ஜனதா கேட்டு பெறும் மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி பேட்டி


தமிழகத்தில் வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளை பா.ஜனதா கேட்டு பெறும் மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி பேட்டி
x
தினத்தந்தி 23 Jan 2021 12:30 AM IST (Updated: 23 Jan 2021 12:30 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளை பா.ஜனதா கேட்டு பெறும் என்று அந்த கட்சியின் மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி கூறினார்.

நெல்லை,

பா.ஜனதா கட்சி சார்பில் நெல்லை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சக்தி கேந்திர பொறுப்பாளர்கள் கூட்டம் நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள ஒரு ஓட்டலில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாநில தலைவர் எல்.முருகன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் மகராஜன் வரவேற்று பேசினார். மாநில துணைத்தலைவர் நயினார் நாகேந்திரன், மாவட்ட பார்வையாளர் பாலாஜி, அமைப்பு செயலாளர் கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பா.ஜனதா தேசிய பொதுச்செயலாளரும், தமிழக மேலிட பொறுப்பாளருமான சி.டி.ரவி சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஜே.பி.நட்டா வருகை

வருகிற 30, 31 ஆகிய தேதிகளில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல கூட்டங்களில் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கலந்துகொள்கிறார். வருகிற சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் வெற்றி பெற்று தமிழகத்தில் ஆட்சியை தக்க வைத்துக்கொள்ளும்.

தமிழகத்தில் நடந்த வெற்றிவேல் யாத்திரை வெற்றி பெற்றுள்ளது. அதேபோல் நம்ம ஊர் பொங்கல் விழா மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான அரசு தமிழகத்தில் ரூ.5 லட்சத்து 10 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களை செயல்படுத்தி உள்ளது.

வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள்

பிரதமர் மோடி சுதந்திர தினம், குடியரசு தினம் உள்ளிட்ட பல நிகழ்வுகளில் உரையாற்றுகையில் திருக்குறள், கம்பராமாயணம் உள்ளிட்ட தமிழ் நூல்களை மேற்கோள் காட்டி தமிழை அங்கீகாரப்படுத்தி பேசி வருகிறார்.

தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் கட்சியை பலப்படுத்தி வருகிறோம். பா.ஜனதாவுக்கு வெற்றி வாய்ப்பு உள்ள தொகுதிகளை ‘ஏ’ பிரிவாகவும், பலப்படுத்த வேண்டிய தொகுதிகளை ‘பி’ பிரிவாகவும், பலவீனமான தொகுதிகளை ‘சி’ பிரிவாகவும் பிரித்து பணிகளை செய்து வருகிறோம். வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளை கேட்டு பெற்று போட்டியிடுவோம். சசிகலா விடுதலையான பிறகு மாற்றம் ஏற்படுமா என்பது குறித்து பொறுத்திருந்து பார்க்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மாநில மாநாடு

முன்னதாக பா.ஜனதா மாநில தலைவர் எல்.முருகன் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகம் முழுவதும் கடந்த 18-ந்தேதி தொடங்கிய பா.ஜனதா பூத் கமிட்டி கூட்டம் வருகிற 25-ந்தேதி வரை நடக்கிறது. 10 லட்சம் உறுப்பினர்கள் சேர்க்கைக்கான பணிகள் நடந்து வருகிறது. இதுவரை 80 சதவீதம் பூத் கமிட்டி பணிகள் முடிவு பெற்றுள்ளது. இன்னும் 20 சதவீதம் பணிகளை 5 நாட்களில் முடித்து விடுவோம். வருகிற 25-ந்தேதிக்குள் 30 பேர் கொண்ட பூத் கமிட்டி அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

வருகிற 30-ந்தேதி ஜே.பி.நட்டா மதுரை வருகிறார். அவர் தலைமையில் கூட்டணி கட்சி தலைவர்கள் கூட்டம் நடத்த இருக்கிறோம். அனைத்து மாவட்டங்களிலும் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறோம். கட்சியில் உள்ள அணிகள் சார்பில் பல மாவட்டங்களில் மாநாடு நடக்கிறது. வருகிற 6-ந்தேதி ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் சேலத்தில் நடக்கும் இளைஞர் அணி மாநாட்டில் கலந்து கொள்கிறார். 14-ந்தேதி ராமநாதபுரத்தில் மகளிரணி மாநாடும், சென்னை ஸ்ரீபெரும்புதூரில் பட்டியலணி மாநாடு, மார்ச் மாதத்தில் பா.ஜனதா மாநில மாநாடு நடத்த இருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர்.

Next Story