சங்கரன்கோவிலில் விசைத்தறி தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் நூல் விலை உயர்வை ரத்து செய்ய வலியுறுத்தல்


சங்கரன்கோவிலில் விசைத்தறி தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் நூல் விலை உயர்வை ரத்து செய்ய வலியுறுத்தல்
x
தினத்தந்தி 23 Jan 2021 2:23 AM IST (Updated: 23 Jan 2021 2:23 AM IST)
t-max-icont-min-icon

சங்கரன்கோவிலில் நூல் விலை உயர்வை ரத்து செய்யக்கோரி விசைத்தறி உரிமையாளர்கள், தொழிலாளர்கள் நேற்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சங்கரன்கோவில்,

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் விசைத்தறி தொழில் முக்கிய தொழிலாக விளங்கி வருகிறது. இங்கு சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. இதன்மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 20 ஆயிரம் தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர்.

கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு காரணமாக விசைத்தறி தொழில் அடியோடு முடங்கிப்போனது. இதனால் பல கோடி ரூபாய் மதிப்பிலான துணிகள் உற்பத்தி பாதிக்கப்பட்டது. தொழிலாளர்களும் வேலை இழந்து தவித்தனர். தற்போது ஊரடங்கு தளர்வில் மீண்டும் விசைத்தறிகள் இயங்கி வந்த நிலையில் நூல் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து உள்ளது. இதனால் விசைத்தறி தொழில் மீண்டும் முடங்கும் அபாயத்தில் உள்ளது.

வேலைநிறுத்தம்

இதையடுத்து நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த தவறியதாக மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும், நூல் விலை உயர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும் சங்கரன்கோவிலில் விசைத்தறி உரிமையாளர்கள், தொழிலாளர்கள் நேற்று வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் விசைத்தறிகள் அனைத்தும் இயங்கவில்லை. இதன் காரணமாக பல லட்சம் ரூபாய் மதிப்பிலான துணி உற்பத்தி பாதிக்கப்பட்டது.

ஆர்ப்பாட்டம்

மேலும் சங்கரன்கோவில் பாடாபிள்ளையார் கோவில் அருகே மாஸ்டர் வீவர்ஸ் அசோசியேசன், திருமுருகன் சிறுவிசைத்தறி தொழிலாளர் சங்கம், தொ.மு.ச., சி.ஐ.டி.யூ., ஐ.என்.டி.யூ.சி., பி.எம்.எஸ். தொழிற்சங்கங்களின் சார்பில் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்துக்கு மாஸ்டர் வீவர்ஸ் அசோசியேசன் தலைவர் சுப்பிரமணியன், திருமுருகன் சிறுவிசைத்தறி தொழிலாளர் சங்க தலைவர் முத்து சங்கரசுப்பிரமணியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் முத்துபாண்டி, சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் வேல்முருகன், தொ.மு.ச. சண்முகசுந்தரம், ஐ.என்.டி.யூ.சி. முருகேசன், பி.எம்.எஸ். பாடாலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கோஷம்

ஆர்ப்பாட்டத்தில் நூல் விலை உயர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் மாஸ்டர் வீவர்ஸ் அசோசியேசன் செயலாளர் சுப்பிரமணியன், விசைத்தறி உரிமையாளர்கள் பி.ஜி.பி.ராமநாதன், வைரவன், சங்கரசுப்பிரமணியன், சி.ஐ.டி.யூ. நகர தலைவர் ரத்தினவேல், செயலாளர் லட்சுமி, பொருளாளர் மாணிக்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தாலுகா செயலாளர் அசோக்ராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story