இந்தியாவிலேயே முதன் முறையாக தமிழகத்தில் அலங்கார மீன்வளர்ப்பு முனையம் நிச்சயம் அமையும்; மத்திய மந்திரி கிரிராஜ் சிங் தகவல்
இந்தியாவிலேயே முதன் முறையாக தமிழகத்தில் அலங்கார மீன்வளர்ப்பு முனையம் நிச்சயம் அமையும் என மத்திய மந்திரி கிரிராஜ் சிங் தெரிவித்தார்.
அடிக்கல் நாட்டினார்
காஞ்சீபுரம் மாவட்டம் படப்பையில் நீர்வாழ் உயிரின தனிமைப்படுத்துதல் மற்றும் நோய் கண்டறியும் ஆய்வகத்துக்கு மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை மந்திரி கிரிராஜ் சிங் அடிக்கல் நாட்டினார். இதில் மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார், மத்திய மீன்வளம் கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை செயலாளர் ராஜீவ் ரஞ்சன், தமிழக மீன்வளம் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை செயலாளர் கோபால் ஆகியோர் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில் மத்திய மந்திரி கிரிராஜ் சிங் பேசியதாவது:-
அலங்கார மீன்வளர்ப்பு முனையம்
அலங்கார மீன்வளர்ப்பு துறையில் ஏற்றுமதிக்கான வாய்ப்புகள் ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு இருக்கிறது. தமிழகத்தில் அலங்கார மீன் வளர்ப்பு வாய்ப்புகளை பயன்படுத்தி மீனவ மக்கள் தங்களது பொருளாதார நிலைமையை உயர்த்த வேண்டும். மத்திய, மாநில அரசுகள் இணைந்து அலங்கார மீன்வளர்ப்பு முனையம் திட்டத்தை செயல்படுத்தும். இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழகத்தில் அமையும் அலங்கார மீன்வளர்ப்பு முனையம் மீனவர்களுக்கு நிச்சயம் வரப்பிரசாதமாக அமையும்.
படப்பையில் அமைய உள்ள நீர்வாழ் உயிரின தனிமைப்படுத்துதல் மற்றும் நோய் கண்டறியும் ஆய்வகம் ஒரு ஆண்டுக்குள் செயல்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
ஆய்வு
அதனைத்தொடர்ந்து, சென்னை நீலாங்கரையில் உள்ள நீர்வாழ் உயிரினங்கள் தனிமைப்படுத்தும் மையத்தை கிரிராஜ் சிங் நேரில் பார்வையிட்டார். பின்னர் முட்டுக்காட்டிலுள்ள மத்திய உவர்நீர் மீன்வளர்ப்பு நிறுவனத்தில் நடந்துவரும் பல்வேறு ஆய்வு பணிகளை நேரில் பார்வையிட்டார். தொடர்ந்து சென்னை மாதவரத்தில் உள்ள மீன்கள் வளர்ப்பு மையத்தை பார்வையிட்டார். பின்னர் மாதவரம் மத்திய பால் பண்ணைக்கு சென்ற அவர் ஆவின் தயாரிப்பு பொருட்களை ஆய்வு செய்தார். ஆவின் நிறுவனத்தின் பணிகள் குறித்து அதிகாரிகளுடனும் அவர் ஆலோசித்தார்.
மேற்கண்ட தகவல் மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story