ஈரோட்டில் நாளை தேர்தல் பிரசாரத்துக்கு வருகை: காந்தி, காமராஜர், பெரியார் உள்பட 8 தலைவர்கள் சிலைக்கு ராகுல்காந்தி மாலை அணிவிக்கிறார்


ஈரோட்டில் நாளை தேர்தல் பிரசாரத்துக்கு வருகை: காந்தி, காமராஜர், பெரியார் உள்பட 8 தலைவர்கள் சிலைக்கு ராகுல்காந்தி மாலை அணிவிக்கிறார்
x
தினத்தந்தி 23 Jan 2021 1:11 AM GMT (Updated: 23 Jan 2021 1:11 AM GMT)

ஈரோட்டில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) தேர்தல் பிரசாரத்துக்கு வரும் ராகுல்காந்தி இங்குள்ள காந்தி, காமராஜர், பெரியார் சிலைகள் உள்பட 8 தலைவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்ய இருப்பதாக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறினார்.

ஈரோடு,

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி எம்.பி. தமிழகத்தில் தேர்தல் பிரசார பயணம் மேற்கொள்ள உள்ளார். இதற்காக இன்று (சனிக்கிழமை) புதுடெல்லியில் இருந்து கோவை வரும் அவர் இன்று இரவு திருப்பூரில் தங்குகிறார். நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை திருப்பூரில் இருந்து புறப்பட்டு ஈரோடு வருகிறார்.

அவர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் உற்சாக வரவேற்பு அளிப்பது குறித்து ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி கூட்டம் நேற்று ஈரோட்டில் நடந்தது. கூட்டத்துக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தலைமை தாங்கினார்.

காமராஜர்

அப்போது நிருபர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது:-

இந்திய தேசிய காங்கிரஸ் இளம் தலைவர் ராகுல்காந்தி 24-ந் தேதி (இன்று) ஈரோடு வருகிறார். அவருக்கு காலை 10 மணிக்கு ஈரோடு மாவட்ட எல்லை ஊத்துக்குளியில் வரவேற்பு அளிக்கப்படுகிறது. அங்கிருந்து 10.30 மணிக்கு பெருந்துறை வரும் அவருக்கு அங்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது.

பகல் 11 மணி அளவில் ராகுல்காந்தி ஈரோடு அரசு ஆஸ்பத்திரி ரவுண்டானா பகுதிக்கு வருகிறார். அங்கு தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் சார்பில் பெண்கள் உற்சாக வரவேற்பு அளிக்கிறார்கள். அங்கு பெருந்தலைவர் காமராஜர், சொல்லின் செல்வர் ஈ.வி.கே.சம்பத் ஆகியோரின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.

காந்தி-பெரியார்

அங்கிருந்து அவர் பொதுமக்களை சந்தித்தவாறே ஈரோடு மாநகராட்சி அலுவலக வளாகத்துக்கு வருகிறார். அங்குள்ள தேசப்பிதா காந்தியடிகள் சிலைக்கு ராகுல்காந்தி மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். பின்னர் பன்னீர்செல்வம் பூங்காவில் காங்கிரசார் பெரும் வரவேற்பு அளிக்கிறார்கள்.

பன்னீர்செல்வம் பூங்காவில் உள்ள சிலை வளாகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஆகியோரின் சிலைகளுக்கு ராகுல்காந்தி மாலைகள் அணிவித்து மரியாதை செலுத்துகிறார். பின்னர் அங்கு பொதுமக்கள் மத்தியில் பேசுகிறார்.

தீரன்சின்னமலை

அதற்கு பின்னர் சாலை மார்க்கமாக அறச்சலூர் ஓடாநிலை செல்லும் அவர் சுதந்திரபோராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு இல்லத்துக்கு சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். அங்கு நெசவாளர்களுடன் கலந்துரையாடி அவர்களிடம் பேசுகிறார். மதிய உணவை நெசவாளர்களுடன் சேர்ந்து சாப்பிடுகிறார்.

அங்கிருந்து புறப்பட்டு செல்லும் அவருக்கு காங்கேயத்தில் வரவேற்பு அளிக்கப்படுகிறது. பின்னர் தாராபுரத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். இரவு உணவை அங்கேயே முடித்து விட்டு தாராபுரத்தில் தங்குகிறார்.

திரளாக பங்கேற்க வேண்டும்

ஈரோடு மாவட்டத்தில் ராகுல்காந்தி கலந்து கொள்ளும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் காங்கிரஸ் தொண்டர்களும், பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டு வரவேற்பு அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறினார்.

கூட்டத்தில் மாநில மகளிர் அணி தலைவி சுதா ராமகிருஷ்ணன், ஈரோடு மாநகர் மாவட்ட தலைவர் ஈ.பி.ரவி, சிறுபான்மை பிரிவு தலைவர் ஜெ.சுரேஷ், துணைத்தலைவர்கள் கே.என்.பாட்ஷா, முகமது அர்சத், மாவட்ட காங்கிரஸ் முக்கிய பொறுப்பாளர்கள் ஈ.ஆர்.ராஜேந்திரன், ஞானசேகரன், விஜயபாஸ்கர், ராஜேஸ் ராஜப்பா, விஜய கண்ணா, மாநகர பொறுப்பாளர்கள் ஜாபர்சாதிக், திருச்செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர். ராகுல்காந்தி ஈரோட்டில் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் காந்தி, காமராஜர், பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர்., கருணாநிதி, ஈ.வி.கே.சம்பத், ஜெயலலிதா என 8 தலைவர்களின் சிலைகளுக்கும் மாலை அணிவிக்கிறார். இதுபோல் ஓடாநிலையில் தீரன் சின்னமலை மணி மண்டபத்தில் அவருக்கு மரியாதை செய்ய உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story