ஈரோடு மாவட்டத்தில் 10, 12-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு கற்றல் விளைவு மதிப்பீடு பயிற்சி


ஈரோடு மாவட்டத்தில் 10, 12-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு கற்றல் விளைவு மதிப்பீடு பயிற்சி
x
தினத்தந்தி 23 Jan 2021 6:44 AM IST (Updated: 23 Jan 2021 6:44 AM IST)
t-max-icont-min-icon

ஈரோடு மாவட்டத்தில் 10 மற்றும் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு கற்றல் விளைவு மதிப்பீடு பயிற்சி நேற்று நடந்தது.

ஈரோடு,

கொரோனா தாக்கம் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் அனைத்து பள்ளிக்கூடங்களும் மூடப்பட்டன. மேலும் மாணவ-மாணவிகளின் கல்வி பாதிக்காத வகையில், கல்வி தொலைக்காட்சியில் ஆன்லைன் வகுப்புகள் மூலமாக பாடங்கள் நடத்தப்பட்டு வந்தன. இதில் மாணவர்கள் பங்கேற்று வந்தனர். 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவ-மாணவிகள் பொதுத்தேர்வுக்கு தயாராகும் வகையில் கடந்த 19-ந்தேதி ஈரோடு மாவட்டத்தில் உள்ள 403 பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டன. தற்போது மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி.யில் 29 ஆயிரத்து 542 மாணவ -மாணவிகளும், பிளஸ்-2 வகுப்பில் 24 ஆயிரத்து 710 மாணவ-மாணவிகளும் படித்து வருகிறார்கள். கடந்த 19 மற்றும் 20-ந்தேதிகளில் மாணவ-மாணவிகளுக்கு மனநல ஆலோசனைகள் வழங்கப்பட்டன. அப்போது கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை எவ்வாறு கடைப்பிடிக்க வேண்டும் என்பது குறித்து தெளிவாக கூறப்பட்டது.

கற்றல் விளைவு பயிற்சி

இந்த நிலையில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிக்கூடங்களிலும் மாணவ-மாணவிகளுக்கு கற்றல் விளைவுகள் பயிற்சி நேற்று நடந்தது.

இதுகுறித்து ஆசிரியர்கள் கூறும்போது ‘கொரோனா தாக்கம் காரணமாக கடந்த 9 மாதங்களாக எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கு ஆன்லைன் வகுப்புகள் மூலம் பாடங்கள் நடத்தப்பட்டு வந்தன. அவர்கள் எந்த அளவுக்கு அந்தப் பாடங்களை கற்று உள்ளனர் என்பதை தெரிந்து கொள்ளும் வகையில் கற்றல் விளைவு மதிப்பீடு பயிற்சி அளிக்கப்பட்டது’ என்றனர்.

தற்போது பெரும்பாலான பள்ளிக்கூடங்களில் முழு அளவில் மாணவ-மாணவிகள் இன்னும் பள்ளிக்கூடத்துக்கு வரவில்லை. பாதி பேர் மட்டுமே வகுப்புகளுக்கு நேரடியாக வருகின்றனர். கொரோனா பீதி காரணமாக பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை இன்னும் பள்ளிக்கூடங்களுக்கு அனுப்ப தயக்கம் காட்டி வருகிறார்கள். பள்ளிக்கூடங்களுக்கு வராத மாணவ-மாணவிகளுக்கு ஆன்லைன் மூலம் பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது.

Next Story