சென்னையில் மேலும் 18 இளஞ்சிறார், சிறுமியர் மன்றங்கள்; போலீஸ் கமிஷனர் தொடங்கி வைத்தார்
சென்னையில் மேலும் 18 இளஞ்சிறார், சிறுமியர் மன்றங்களை சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் தொடங்கி வைத்தார்.
18 இளஞ்சிறார் மன்றங்கள்
எண்ணூர் சுனாமி குடியிருப்பில் இளஞ்சிறார், சிறுமியர் மன்ற கட்டிட திறப்பு விழா நேற்று நடந்தது. விழாவுக்கு துணை கமிஷனர்கள் பாலகிருஷ்ணன், சுப்புலட்சுமி மகேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் கலந்துகொண்டு குத்து விளக்கேற்றி இளஞ்சிறார், சிறுமியர் மன்ற புதிய கட்டிடத்தை திறந்து வைத்தார்.
அதைத்தொடர்ந்து சென்னையில் மேலும் 18 இடங்களில் இளஞ்சிறார் மற்றும் சிறுமியர் மன்றங்களை அவர் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் பேசியதாவது:-
கல்வி, விளையாட்டு பயிற்சி
சென்னையில் தற்போது தொடங்கிய 18 மன்றங்களுடன் சேர்த்து இதுவரை 97 இளஞ்சிறார், சிறுமியர் மன்றங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த மன்றத்தில் உள்ள சிறார்களுக்கு கல்வி, விளையாட்டு பயிற்சி கொடுத்து வருகிறோம். அடுத்த 4 வருடத்தில் இங்கு உள்ளவர்கள் டாக்டர்கள், என்ஜினீயர்களாக தேர்வாகி தேசிய அளவில் சாதிக்க உள்ளனர்.
புதிதாக தொடங்கிய 18 மன்றத்திற்கும் அந்த பகுதியில் உள்ள இன்ஸ்பெக்டர்கள் அடிக்கடி சென்று அவர்களுக்கு உரிய உதவிகளை செய்ய வேண்டும். திறமை இருந்து அதை வெளியே கொண்டுவர முடியாத சிறார்களுக்கு துணை கமிஷனர்கள் உதவி செய்து அவர்களுக்கு நீட் தேர்வு, ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற தேர்வுகளில் வெற்றிபெற இலவச பயிற்சி அளிக்க வாய்ப்பு செய்து கொடுக்க வேண்டும்.
முக்கிய தடயம்
சென்னை முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள நல்ல செயல்பாட்டில் உள்ளது. பல வழக்குகளில் இவை முக்கிய தடயமாக உள்ளது. வாரந்தோறும் இன்ஸ்பெக்டர் தலைமையிலான குழுவினர் கேமராக்களை கண்காணித்து வருகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக சென்னை வடக்கு மண்டல இணை கமிஷனர் பாலகிருஷ்ணன் வரவேற்றார். முடிவில் எண்ணூர் போலீஸ் உதவி கமிஷனர் ராஜேந்திரன் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story