கோவில்பட்டியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மோட்டார்சைக்கிள் பேரணி போலீஸ் சூப்பிரண்டு தொடங்கி வைத்தார்


கோவில்பட்டியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மோட்டார்சைக்கிள் பேரணி போலீஸ் சூப்பிரண்டு தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 24 Jan 2021 6:53 AM IST (Updated: 24 Jan 2021 6:53 AM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மோட்டார்சைக்கிள் பேரணியை, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தொடங்கி வைத்தார்.

கோவில்பட்டி,

கோவில்பட்டியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மோட்டார்சைக்கிள் பேரணியை, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தொடங்கி வைத்தார்.

மோட்டார்சைக்கிள் பேரணி

கோவில்பட்டி காந்தி மைதானத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மோட்டார் சைக்கிள் பேரணி நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமை தாங்கி பேரணியை தொடங்கி வைத்தார்.

காந்தி மைதானத்தில் தொடங்கிய இந்த பேரணி கதிரேசன் கோவில் ரோடு, பூங்கா ரோடு, மெயின்ரோடு, புதுரோடு, எட்டயபுரம் ரோடு வழியாக வந்து மீண்டும் காந்தி மைதானத்தில் முடிவடைந்தது.

முன்னதாக சூப்பிரண்டு ஜெயக்குமார் பேசியதாவது:-

முன்பு சாலை பாதுகாப்பு வாரம் தான் கடைபிடிக்கப்பட்டு வந்தது. இந்தாண்டு சாலை பாதுகாப்பு மாதமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. விபத்துகளில் 40 சதவீதம் பேர் மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் தான் உயிரிழக்கின்றனர். ஆனால் மக்கள் தலைக்கவசம் எடுத்துச்செல்வதை பழக்கப்படுத்துவது இல்லை.

பாதுகாக்கப்பட்ட பயணம்

நமது உயிரை காப்பாற்றக்கூடியது தலைக்கவசம்தான். மோட்டார் சைக்கிள் ஓட்டுபவர்கள் தலைக்கவசம் அணிவதை 100 சதவீதம் நடைமுறைக்கு கொண்டுவர வேண்டும். 4 சக்கர வாகனத்தில் செல்பவர்கள் கண்டிப்பாக சீட் பெல்ட் அணிய வேண்டும். தலைக்கவசம், 4 சக்கர வாகனங்களில் சீட்பெல்ட் அணிந்திருந்தால் 60 சதவீத உயிரிழப்புகளை தடுக்கலாம். இதுதொடர்பாக மக்களிடம் தற்போது விழிப்புணர்வு வந்துள்ளது. 20 சதவீதம் பேர் தலைக்கவசம் அணியும் ்பழக்கத்தை கொண்டு வந்துள்ளனர். இது 100 சதவீதமாக மாற வேண்டும். அப்போதுதான் பாதுகாக்கப்பட்ட பயணமாக இருக்கும்.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் துணை சூப்பிரண்டு கலைக்கதிரவன், இன்ஸ்பெக்டர்கள் அய்யப்பன், பத்மாவதி, போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் நாராயணன் மற்றும் கல்லூரி மாணவர்கள், மோட்டார்சைக்கிள் நிறுவன ஊழியர்கள் உள்பட போலீசார் பலரும் கலந்துகொண்டனர்.

கயத்தாறு

கயத்தாறு சுங்கச்சாவடியில் தேசிய சாலை பாதுகாப்பு மாத விழா நேற்று நடைபெற்றது. விழாவிற்கு போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமை தாங்கி பேசினார். இதைத்தொடர்ந்து கோவில்பட்டி துணை சூப்பிரண்டு கலைகதிரவன் துண்டு பிரசுரங்களை வழங்கினார். நிகழ்ச்சியில் கயத்தாறு இன்ஸ்பெக்டர் முத்து, சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் சுங்கச்சாவடி அலுவலர்கள் உள்பட பலரும் கலந்து கொண்டனர்.

Next Story