விழுப்புரம் அருகே செவிலியர் வீட்டில் ரூ.4 லட்சம் திருட்டு மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு


விழுப்புரம் அருகே செவிலியர் வீட்டில் ரூ.4 லட்சம் திருட்டு மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
x
தினத்தந்தி 24 Jan 2021 3:31 AM GMT (Updated: 24 Jan 2021 3:31 AM GMT)

விழுப்புரம் அருகே செவிலியர் வீட்டில் ரூ.4 லட்சத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

விழுப்புரம்,

விழுப்புரம் அருகே உள்ள முத்தாம்பாளையம் வாஞ்சிநாதன் தெருவில் வசித்து வருபவர் கோவிந்தசாமி மனைவி புவனேஸ்வரி (வயது 58). இவர் விழுப்புரம் அருகே தோகைப்பாடியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியராக பணியாற்றி வருகிறார். இவருடைய கணவர் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டார்.

இந்நிலையில் புவனேஸ்வரி கடந்த 21-ந் தேதியன்று வீட்டை பூட்டிவிட்டு திருப்பூரில் உள்ள தனது மகள் சரஸ்வதியை பார்க்க சென்று விட்டார். இதனிடையே நேற்று முன்தினம் புவனேஸ்வரி வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு வீடு திறந்து கிடந்தது. இதை பக்கத்து வீட்டில் வசிக்கும் சத்யா என்பவர் பார்த்து திடுக்கிட்டார். பின்னர் இதுகுறித்து அவர் புவனேஸ்வரியை செல்போனில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தார். உடனே புவனேஸ்வரி, அதே பகுதியில் வசித்து வரும் தனது மகன் சிவக்குமாரை தொடர்பு கொண்டு பேசியதன்பேரில் அவர், தனது தாய் வீட்டிற்குள் சென்று பார்த்தார்.

ரூ.4 லட்சம் திருட்டு

அப்போது வீட்டிற்குள் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த ரூ.4 லட்சம் ரொக்கம் திருட்டு போயிருந்ததை அறிந்து அதிர்ச்சியடைந்தார். உடனே சிவக்குமார், இதுபற்றி விழுப்புரம் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவலின்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு திருட்டு நடந்த வீட்டில் பதிந்திருந்த தடயங்களை சேகரித்தனர். வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள், கதவு பூட்டை உடைத்து உள்ளே புகுந்து பணத்தை திருடிச்சென்றிருப்பது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story