நீலகிரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 10-க்கும் கீழ் குறைந்தது; குறும்படங்கள் மூலம் விழிப்புணர்வு


நீலகிரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 10-க்கும் கீழ் குறைந்தது; குறும்படங்கள் மூலம் விழிப்புணர்வு
x
தினத்தந்தி 24 Jan 2021 5:30 AM GMT (Updated: 24 Jan 2021 5:30 AM GMT)

நீலகிரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 10-க்கும் கீழ் குறைந்தது. குறும்படங்கள் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
நீலகிரி மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு தினமும் 20 பேருக்கு மேல் தொற்று உறுதி செய்யப்பட்டு வந்தது. அரசின் வழிகாட்டுதல் படி பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதால் பூரண குணமடைந்து வீடு திரும்புபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. சுற்றுலா தலம் என்பதால் பரவலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது தினமும் 10-க்கும் குறைவான நபர்களுக்கு உறுதியாகி வருகிறது.

கொரோனா பாதிக்கப்பட்டோரில், 8 ஆயிரத்து 32 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். ஊட்டி அரசு தலைமை மருத்துவமனை, குன்னூர் அரசு மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் 56 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். வெளிமாவட்ட மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் அதிகம் பேர் வருவதால் குறிப்பிட்ட இடைவெளியில் பூங்காக்களில் பணிபுரியும் பணியாளர்கள் மற்றும் சோதனை சாவடிகளில் பணிபுரிபவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. ஒரு நாளைக்கு 2, 000 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வந்தது.

குறும்படங்கள் மூலம் விழிப்புணர்வு
தற்போது தொற்று பாதிப்பு குறைந்து உள்ளதால், பரிசோதனை எண்ணிக்கை குறைக்கப்பட்டு இருக்கிறது. தினமும் ஆயிரம் பேரிடம் இருந்து மாதிரி சேகரிக்கப்பட்டு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை சார்பில், கொரோனா வைரஸ் குறித்து பொதுமக்களுக்கு குறும்படங்கள் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதற்காக அதிநவீன வாகனம் நீலகிரிக்கு வரவழைக்கப்பட்டு இருக்கிறது. 35 ஊராட்சிக்கு உட்பட்ட 1,284 கிராமங்கள், 11 பேரூராட்சிக்கு உட்பட்ட 540 கிராமங்கள்,

ஊட்டி, குன்னூர், கூடலூர் ஆகிய 3 நகராட்சிகளுக்கு உட்பட்ட வார்டு பகுதிகளில் வசித்து வரும் பொதுமக்களுக்கு கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக தொடங்கி வைக்கப்பட்டது. இந்த வாகனம் 3 மாதங்கள் மாவட்டம் முழுவதிலும் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அடிக்கடி கை கழுவுவது, முககவசம் அணிவது, சமூக இடைவெளி கடைபிடிப்பது, பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து குறும்படங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. மேலும் செய்தி மக்கள் தொடர்பு துறை மூலம் விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story