டெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு - மராட்டியத்தில் விவசாயிகள் பிரம்மாண்ட பேரணி


டெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு - மராட்டியத்தில் விவசாயிகள் பிரம்மாண்ட பேரணி
x
தினத்தந்தி 24 Jan 2021 5:14 PM IST (Updated: 24 Jan 2021 5:21 PM IST)
t-max-icont-min-icon

டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக மராட்டிய மாநிலத்தில் விவசாயிகள் பிரம்மாண்ட பேரணி நடத்தினர்.

மும்பை:

டெல்லி எல்லையில் பஞ்சாப், அரியானா உள்ளிட்ட மாநில விவசாயிகள் வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி கடந்த நவம்பர் 26ந்தேதியில் இருந்து கடும் குளிரிலும் தீவிர போராட்டம் நடத்தி வருகின்றனர்.  எனினும், வேளாண் சட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கும், மத்திய அரசுக்கும் இடையே உறுதியான எந்த முடிவும் எட்டப்படவில்லை.

வேளாண் சட்டங்களை 18 மாதங்களுக்கு அமல்படுத்தாமல் நிறுத்தி வைக்க மத்திய அரசு ஒப்பு கொண்ட போதும் சட்டங்களை அடியோடு ரத்து செய்ய வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

இதற்கிடையில், வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி குடியரசுதினத்தன்று (ஜனவரி 26) டெல்லியில் பிரம்மாண்டமான அளவில் டிராக்டர் பேரணி நடத்த விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர்.

இந்நிலையில், டெல்லி எல்லையில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் மராட்டிய மாநிலத்தில் அனைத்திந்திய கிசான் சபா சார்பில் இன்று பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது.

மும்பையில் இருந்து நாசிக் வரை நடைபெற்ற இந்த பேரணியில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் பங்கேற்று டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு தங்கள் ஆதரவை வெளிப்படுத்தினர்.

Next Story