விக்கிரமங்கலம் அருகே பிறந்த குழந்தை இறந்ததால் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை உறவினர்கள் முற்றுகை


விக்கிரமங்கலம் அருகே பிறந்த குழந்தை இறந்ததால் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை உறவினர்கள் முற்றுகை
x
தினத்தந்தி 25 Jan 2021 12:35 AM IST (Updated: 25 Jan 2021 12:35 AM IST)
t-max-icont-min-icon

விக்கிரமங்கலம் அருகே பிறந்த குழந்தை இறந்ததால் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை உறவினர்கள் முற்றுகையிட்டனர்.

விக்கிரமங்கலம்:

அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே உள்ள சாத்தாம்பாடி வடக்கு தெருவை சேர்ந்தவர் ராஜசேகர். இவருடைய மனைவி அபிராமி(வயது 22). நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அபிராமியை பிரசவத்திற்காக நேற்று முன்தினம் காலை 9 மணியளவில் சாத்தாம்பாடி அருகே உள்ள குணமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றனர். 

பின்னர் மாலை 5 மணி அளவில் அபிராமிக்கு பிரசவம் நடைபெற்றது. அப்போது பிறந்த ஆண் குழந்தை, பனிக்குடம் உடைந்து தண்ணீர் குடித்து விட்டதாக கூறி, உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் அரியலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே குழந்தை இறந்து விட்டதாக கூறினர்.

முற்றுகை

இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜசேகர் மற்றும் அவரது உறவினர்கள் குணமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டனர். அப்போது, 2 அல்லது 3 மருத்துவமனைக்கு ஒரு டாக்டரை நியமிப்பதால் இப்படி நடப்பதாகவும், இனி ஆரம்ப சுகாதார மருத்துவமனைகளில் டாக்டர் இருக்கும்படி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் போதிய உபகரணங்களை மருத்துவமனைக்கு வழங்க வேண்டும். இனியும் இதுபோன்று குழந்தைகள் சாகக்கூடாது என்று அவர்கள் கூறினர்.

இது பற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த விக்கிரமங்கலம் போலீசார், ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று‌ கூறினர். அதன்பேரில் போராட்டத்தை கைவிட்டு அவர்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story