பெங்களூரு மானேக்‌ஷா மைதானத்தில் நாளை குடியரசு தின விழா கவர்னர் வஜூபாய் வாலா தேசிய கொடி ஏற்றுகிறார்


பெங்களூரு மானேக்‌ஷா மைதானத்தில் நாளை குடியரசு தின விழா கவர்னர் வஜூபாய் வாலா தேசிய கொடி ஏற்றுகிறார்
x
தினத்தந்தி 24 Jan 2021 9:26 PM GMT (Updated: 24 Jan 2021 9:26 PM GMT)

பெங்களூருவில் நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெறும் குடியரசு தின விழாவில் கவர்னர் வஜூபாய் வாலா தேசிய கொடி ஏற்றுகிறார். கொரோனா பரவல் காரணமாக இந்த விழாவில் பார்வையாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

பெங்களூரு, 

இந்தியா முழுவதும் நாளை (செவ்வாய்க்கிழமை) குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. அதுேபால் கர்நாடகத்திலும் குடியரசு தின விழாவை சிறப்பாக கொண்டாட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. மாநிலத்தின் தலைநகரான பெங்களூருவில் மாநகராட்சி சார்பில் பெங்களூரு மானேக்‌ஷா அணிவகுப்பு மைதானத்தில் குடியரசு தின விழா நடத்தப்படுகிறது. குடியரசு தின விழாவையொட்டி அங்கு கடந்த 3 நாட்களாக ஒத்திகை நடைபெற்று வருகிறது. போலீசார் பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபட்டு உள்ளனர். மேலும் அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

இதுகுறித்து பெங்களூரு மாநகராட்சி கமிஷனர் மஞ்சுநாத் பிரசாத் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

பெங்களூரு மாநகராட்சி நிர்வாகம் சார்பில் குடியரசு தின விழா பெங்களூரு கப்பன்ரோட்டில் உள்ள மானேக்‌ஷா அணிவகுப்பு மைதானத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. இதில் கவர்னர் வஜூபாய் வாலா கலந்து கொண்டு, சரியாக காலை 9 மணிக்கு மூவர்ண தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்துகிறார். முன்னதாக அவர் 8.58 மணிக்கு விழா அரங்கிற்கு வருகிறார். கொடி ஏற்றிய பிறகு அவர் போலீசாரின் அணிவகுப்பை ஏற்றுக் கொண்டு குடியரசு தின உரையாற்றுகிறார். விழாவில் முதல்-மந்திரி எடியூரப்பா, போலீஸ் மந்திரி பசவராஜ் பொம்மை உள்பட மந்திரிகளும், உயர் அதிகாரிகளும் கலந்துகொள்கிறார்கள்.

அதன் பிறகு போலீஸ் உள்பட பல்வேறு படை பிரிவுகளின் அணிவகுப்பு மரியாதையை கவர்னர் ஏற்றுக் கொள்கிறார். இதையொட்டி விழா நடைபெறும் மைதானத்தை சுற்றிலும் 70 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. விழாவுக்கு வருபவர்களை சோதனை செய்ய 2 ஸ்கேனர்களை அமைக்கவும் முடிவு செய்துள்ளோம். ஏதாவது அசம்பாவித சம்பவங்கள் நிகழ்ந்தால், அதை எதிர்கொள்ள வசதியாக ஆம்புலன்ஸ் வாகனங்கள், மருத்துவ குழுவினரை தயாராக வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் சில மருத்துவமனைகளில் படுக்கைகளை காலியாக வைக்கவும் சம்பந்தப்பட்ட மருத்துவமனை நிர்வாகங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. விழாவுக்கு வரும் முக்கிய பிரமுகர்கள், உயர் அதிகாரிகளுக்காக 500 இருக்கைகள் போடப்பட்டுள்ளன. கொரோனா பரவல் காரணமாக இந்த முறை பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை. கலை நிகழ்ச்சிகளும் நடைபெறாது.

விழாவுக்கு வருபவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளோம். விழாவுக்கு வருபவர்கள் நுழைவு சீட்டு கொண்டு வர வேண்டும். அனைவரும் சோதனைக்கு பின்னரே விழா அரங்கிற்குள் அனுமதிக்கப்படுவார்கள். தேவையான போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பாதுகாப்பு காரணங்களுக்காக விழாவுக்கு வருபவர்கள் செல்போன், ஹெல்மெட்டு கள், கேமராக்கள், குடைகள் போன்ற பொருட்களை எடுத்து வருவதை தவிர்க்க வேண்டும். இந்த பொருட்களுடன் வருபவர்கள் விழா அரங்கிற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். இவ்வாறு மஞ்சுநாத் பிரசாத் கூறினார்.

இந்த பேட்டியின்போது பெங்களூரு நகர மாவட்ட கலெக்டர் சிவமூர்த்தி உள்பட அதிகாரிகள் உடன் இருந்தனர். இந்த விழாவையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அன்றைய தினம் கப்பன் பார்க் ரோட்டில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்த ரோட்டை பயன்படுத்தும் வாகனங்கள் மாற்றுப்பாதையில் செல்லுமாறு போக்குவரத்து போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

Next Story