மணவாசி சாலை விபத்தில் வங்கி ஊழியர் பலி


மணவாசியில் விபத்து நடந்த இடத்தில் மின்விளக்குகள் அமைத்து தரக்கோரி பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டபோது எடுத்த படம்.
x
மணவாசியில் விபத்து நடந்த இடத்தில் மின்விளக்குகள் அமைத்து தரக்கோரி பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டபோது எடுத்த படம்.
தினத்தந்தி 25 Jan 2021 4:17 AM IST (Updated: 25 Jan 2021 4:19 AM IST)
t-max-icont-min-icon

லாலாபேட்டை அருகே சாலை விபத்தில் வங்கி ஊழியர் பரிதாபமாக இறந்தார். இதையடுத்து பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது

 வாலிபர் பலி
கரூர் வெங்கமேடு குளத்துப்பாளையத்தை சேர்ந்தவர் முருகேசன். இவரது மகன் தனபால் (வயது 37). இவர் கரூரில் உள்ள ஒரு வங்கியில் ஒப்பந்த அடிப்படையில் ஊழியராக (ஏஜெண்ட்) வேலை பார்த்து வந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு லாலாபேட்டையில் உள்ள உறவினரை பார்ப்பதற்காக கரூரில் இருந்து தனபால் தனது மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.  
லாலாபேட்டை அருகே திருச்சி-கரூர் தேசிய நெடுஞ்சாலை மணவாசி ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே வந்தபோது, பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று தனபால் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட தனபால் சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி பரிதாபமாக இறந்தார்.
பொதுமக்கள் மறியல்
இதுகுறித்து தகவல் அறிந்த மாயனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் தனபாலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த மணவாசி ஊர் பொதுமக்கள் விபத்து இடத்தில் கூடி, இந்த இடத்தில் மின்விளக்குகள் இல்லாததால் அடிக்கடி இப்பகுதியில் விபத்து ஏற்படுகிறது. எனவே உடனடியாக இப்பகுதியில் மின்விளக்குகள் அமைக்க வேண்டு்ம் என கோரிக்கை வைத்து திருச்சி-கரூர் தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். 

இதுகுறித்து தகவல் அறிந்த குளித்தலை துணை போலீஸ் சூப்பிரண்டு சசிதரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், மின்விளக்குகள் அமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதியளித்தனர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இந்த மறியலால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story